Ad Widget

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு ஆதரவளியோம் – இந்தியா

இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட விருக்கின்ற சர்வதேச விசாரணை அறிக்கைக்கு ஆதரவு வழங்காது என்று இந்தியா அறிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கின்ற பேரவையிலேயே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருகின்றது.

இலங்கையில் புதிய அரசாங்கம் பதிவியேற்று குறுகிய காலமே சென்றுள்ளது.இந் நிலையில், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அரசாங்கம் எண்ணுவதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்தக் காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் 2014ஆம் ஆண்டு முன்வைத்த யோசனைக்கு இந்தியா வாக்களிக்காமல் விலகியிருந்தது.

இந்நிலையில், இவ்வாறான சர்வதேச விசாரணை அறிக்கையின் மூலம் புதிய அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்க இந்தியா விரும்பாது என்றும் த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி இந்தியா செல்லும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நல்லிணக்கம் மற்றும் இன ஒற்றுமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாட உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts