Ad Widget

இலக்கிய நிகழ்வுகளுக்கு மண்டபம் இலவசம் – பிரேணை நிறைவேற்றம்

தமிழை வளர்க்கும் இலக்கிய நிகழ்வுகளை ஊக்கப்படுத்த சாவகச்சேரி நகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் நகராட்சி மன்றத்தின் கீழுள்ள பொன் விழா கலாசார மண்டபத்தை இலவசமாக வழங்கவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் ஞா.கிஷோர் முன்வைத்த பிரேரணை சாவகச்சேரி நகர சபையில் திங்கட்கிழமை (22) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

chavakachche

பிரேரணையை முன்வைத்து ஞா.கிஷோர் உரையாற்றுகையில்,

சாவகச்சேரி நகராட்சி மன்றமானது பல்வேறு சேவைகளை மக்களுக்குச் செய்து வருகின்றது. அண்மைக்காலமாக தென்மராட்சியில் இலக்கிய ஆர்வமிக்கவர்களை ஒன்றிணைத்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நடத்தியுள்ளது.

ஈழத்து இலக்கியவாதிகளை மட்டுமல்லாது தமிழ் நாட்டிலிருந்தும் இலக்கியவாதிகளை அழைத்துவந்து அருகி வருகின்ற இலக்கிய நிகழ்வுகளை சிறப்பாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான இலக்கிய நிகழ்வுகளை ஊக்கப்படுத்துவதற்கு நாமும் பங்களிப்புச் செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் எங்கள் இளம் தலைமுறையினர் தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் ஆர்வமில்லாமல் சினிமா, தொலைக்காட்சி, இணையத்தளம் என பல்வேறு வழிகளில் திசை மாறிச் சென்றுகொண்டிருக்கின்றனர். இப்படியான ஒரு சூழ்நிலையில் தமிழ் இலக்கியம், எமது கலைகள், பண்பாடுகளை வளர்க்கவும், கட்டிக்காக்கவும் வேண்டிய கட்டாயத்தில் நாம் எல்லோரும் இருக்கின்றோம்.

உள்ளூர் அரசாகிய எங்கள் நகராட்சி மன்றமானது தமிழையும், இலக்கியத்தையும் வளர்ப்பதற்கும் எம்மாலான உதவியை வழங்க வேண்டும். யாழ் மாவட்டத்தில் இருக்கின்ற உள்ளூர் மன்றங்களிலே எமது மன்றம்தான் நிகழ்வுகளை நடத்தக்கூடிய சிறப்பான அரங்கத்தைக் கொண்டுள்ளது.

ஆகவே நாம் சபைக்கும் தவிசாளருக்கும் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ் இலக்கிய நிகழ்வுகளை நடத்துகின்ற எமது பிரதேசம் சார்ந்த இலக்கிய அமைப்புக்களுக்கு இலவசமாக அரங்கை வழங்கி, தமிழ் இலக்கிய முயற்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இவ்வாறான இலக்கிய நிகழ்வுகளை தனிநபர் அல்லாத அமைப்பு நடத்துகின்ற போது மண்டபத்தை இலவசமாக வழங்க ஆவன செய்யப்படும் எனவும் சபையின் தவிசாளர் இ.தேவசகாயம்பிள்ளை கூறியதையடுத்து பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

Related Posts