வன்னி இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இரண்டு ஈடுபட்டுள்ளன. போர் நிறைவடைந்து வரும் மே மாதம் 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இனப் போரில் கொல்லப்பட்டவர்களின் விவரங்களை தந்துதவுமாறு அந்த அமைப்புக்கள் கேட்டுள்ளன.

ஜஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய தரவுகளை ஆராயும் குழு ஆகியனவே இந்த விவரங்களைச் சேகரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளன.
ஈழத் தமிழர் விடயத்தில் தொடர்ச்சியாக அக்கறை செலுத்திவரும் ஜஸ்மின், தமது இந்த முயற்சிக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுள்ளார்.
“நாம் இறந்தவர்களுக்கு அவர்களுடைய பெயர்களைச் சேகரித்தாவது மரியாதை செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.
மனித உரிமை இழப்பின் கணக்கெடுப்பைப் பெற்றுக்கொள்வது முக்கியமானதாகும். அத்துடன், ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு நாம் தயாரிக்கப் போகும் இறுதிப்பட்டியலானது, சமூகங்களுக்கு முக்கியமானதான நினைவுச் சின்னத்தை உருவாக்கும் செயற்பாட்டுக்கு உதவியானதாக இருக்கும்” என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டத்தின் பணிப்பாளர் ஜஸ்மின் சூகா கேட்டுள்ளார்.
இந்தத் தகவல்களை சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டத்தின் ipjpsl@gmail.com மற்றும் info@hrdag,org என்ற மிஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.