Ad Widget

இரு காலாவதி திகதிகளுடன் ஷம்போ

யாழ்.மாவட்டத்தில் விற்கப்பட்ட ஒருவகை ஷம்போவில் இரண்டு காலாவதி திகதிகள் அச்சிடப்பட்டமை தொடர்பில் அந்நிறுவனத்தின் விற்பனை நிறைவேற்று அதிகாரிக்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தால் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பாவனையாளர் அதிகார சபை பொறுப்பதிகாரி த.வசந்தசேகரம் தெரிவித்தார்.

இரண்டு காலாவதி திகதிகள் அச்சிடப்பட்ட ஷம்போ வகையொன்று யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டு, குறித்த அந்த ஷம்போ நிறுவனத்தின் விற்பனை நிறைவேற்று அதிகாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது, நீதவான் 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன், இவ்வாறு இரண்டு காலாவதி திகதியிடப்பட்டு விற்பனை செய்த ஷம்போக்களை 2 மாதங்களுக்குள் விற்பனை நிலையங்களிலிருந்து மீளப்பெறவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இருந்தும், 2 மாதங்கள் கடந்த நிலையிலும் விற்பனை நிலையங்களிலிருந்து ஷம்போ பைக்கற்றுக்களை மீள எடுக்கப்படவில்லை.

இவ்விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை (17) கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து, மேற்படி விற்பனை நிறைவேற்று அதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதவான், விநியோகிக்கப்பட்ட ஷம்போக்களை விரைந்து மீளப்பெறும்படி உத்தரவிட்டார் என பாவனையாளர் அதிகார சபை பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

Related Posts