Ad Widget

இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணருக்கு தென்மராட்சியில் மதிப்பளிப்பு விழா

யாழ். போதனா மருத்துவமனையின் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தனின் பணிகளை நயந்து தென்மராட்சி மக்கள் முன்னெடுத்த மதிப்பளிப்பு விழா சாவகச்சேரி சிவன்கோவிலடி தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் 07.10.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் 6 மணி வரை இடம்பெற்றது.

பாராட்டு விழாக்குழுத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். சாவகச்சேரி சிவன் கோவிலில் இருந்து விழா மண்டபம் வரை நாதஸ்வர வித்துவான் கே.எம்.பஞ்சாபிகேசனின் பேரர்களான வி.சித்தார்த்தன் , வி.பிரதித்தன் ஆகியோருடைய இசைமழையில் வரவேற்பு ஊர்வலம் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சைந்தவி ஜனார்த்தனன் இறைவணக்கம் இசைத்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். சாவகச்சேரி முத்துமாரி அம்மன் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ க.வீரபத்திரக்குருக்கள், சாவகச்சேரி பங்குத் தந்தை அருட்பணி றெக்ஸ் சவுந்தரா அடிகள் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர்.

பாராட்டுரைகளை வடமாகாண உறுப்பினர் கேசவன் சயந்தன், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டாக்டர் ச.ஸ்ரீபவானந்தராஜா, தென்மராட்சி பிரதேச செயலர் தேவந்தினி பாபு, உணர்வழியியல் வைத்திய நிபுணர் டாக்டர் சு.பிரேமகிருஷ்ணா, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்யட்சகர் டாக்டர் ப.அச்சுதன், யாழ். போதனா வைத்தியசாலையில் முதன்முதலில் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த ச.ரண்குமார் ஆகியோர் ஆற்றினர்.
.
டாக்டர் சி. முகுந்தனின் பணிகளை நயந்து முகுந்தம் என்ற பாராட்டு விழாச் சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. மலரை சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் கைலைநாதன் வெளியிட்டு வைத்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் முதன்முதலாக திறந்த இருதய சத்திரசிகிச்சையை மேற்கொண்ட குழுவில் பிரதான அங்கம் வகித்த உணர்வழிவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சு.பிரேமகிருஷ்ணா, தலைமைத் தாதிய உத்தியோகத்தர் பி.ஜே.வி.ரமேஷ்குமார் ஆகியோர் முதலமைச்சரால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டனர்.

விழாக்குழுவின் இணைச் செயலர் ச.தயாபரன் நன்றியுரை நல்கினார். நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மாகாண உறுப்பினர்களான அரியரட்ணம், ஜெயசேகரம், கஜதீபன் மற்றும் சாவகச்சேரி நகரசபை, மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தென்மராட்சி மக்கள் சார்பிலான நினைவுக்கிண்ணத்தை முதலமைச்சர் கையளித்தார். சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் சார்பான நினைவுக் கிண்ணத்தை தலைவர் ந.சிவபாலன் , உபதலைவர் வ.ஸ்ரீபிரகாஸ் கையளித்தனர். முகுந்தன் ஆரம்பக் கல்வியைக் கற்ற மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயம் சார்பான கௌரவிப்பை அதிபர் எழிலன் தலைமையிலான பாடசாலைச் சமூகத்தினர் மேற்கொண்டனர். நூற்றுக்கணக்கானோர் பொன்னாடை போர்த்தி வைத்தியரைக் கௌரவித்தனர்.

Related Posts