இராணுவ வாகனம் மோதி தாயும் மகளும் நசியுண்டு பலி!

திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓட்டோவில் பயணித்த தாயும் மகளும் பலியாகியுள்ளனர். அத்துடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் முன்னால் உள்ள பிரதான வீதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

வேகமாக வந்த இராணுவத்தின் டிபெண்டர் ரக வாகனம், ஓட்டோவை மோதித்தள்ளியதில் சாம்பல்தீவு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த நடராசா வாசுகி (வயது – 59) அவரது மகளான நடராசா சிவதாரணி (வயது – 33) ஆகியோர் சம்பவ இடத்திலேயே நசியுண்டு பலியாகியுள்ளனர்.

அதேவேளை, இவர்களுடன் கூடப் பயணித்த க.இராஜேஸ்வரி (வயது – 72) மற்றும் ஓட்டோ சாரதியான அருள்ராஜ் (வயது – 33) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சாம்பல்தீவில் இருந்து கோவில் திருவிழாவுக்கு வந்து வீடு நோக்கி திரும்பிச் செல்லும்போது அதே வீதியில் வேகமாக வந்த திருகோணமலை 22ஆவது இராணுவப் படையணிக்குச் சொந்தமான டிபெண்டர் ரக வாகனம் ஓட்டோவை மோதித்தள்ளி விட்டு வந்த வேகத்தில் பஸ் நிலையப் பகுதியை நோக்கி தப்பிச் சென்றுள்ளது.

எனினும், விபத்தையடுத்து விசாரணைகளை உடன் ஆரம்பித்த பொலிஸார், குறித்த இராணுவ வாகனத்தின் சாரதியான 29 வயதுடைய இராணுவச் சிப்பாயை கைதுசெய்துள்ளனனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நடைபெற்றன.

Related Posts