Ad Widget

இராணுவ ஆட்சியை முழுமையாக்கவே மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி!

“நாட்டில் இராணுவ ஆட்சியை முழுமையாக்குவதற்கு மஹிந்த அரசு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த செயற்பாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களையும் இணைக்கவே பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி என்ற செயற்றிட்டத்தை மேற்கொண்டு வருகிறது.”

Leadership Training Program Sri Lanka University Students

இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம். அத்துடன் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சித் திட்டத்தால் மாணவர்கள் தங்கள் கல்வியிலோ அல்லது வாழ்க்கையிலோ எந்தப் பயனையும் – முன்னேற்றத்தையும் அடைவதில்லை எனவும் விசனம் தெரிவித்துள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மருதானை சீ.எஸ்.ஆர். மண்டபத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அதன் ஏற்பாட்டாளர் நஜீத் இந்திக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தச் செயற்திட்டத்துக்கு சுமார் 20 கோடி ரூபாவை அரசு வருடம்தோறும் செலவிடுகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் வதிவிடமின்மை , புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அத்துடன் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டுத் தொடர்ச்சியாக போராடிய போதிலும் இதுவரை எந்தவொரு தீர்வையும் அரசு வழங்கவில்லை.

ஆனால் மாணவர்களுக்கு எவ்விதத்திலும் பயன்தராத விடயங்களுக்காக நாட்டின் அப்பாவி மக்களின் பணத்தை வீணடிக்கின்றது. நான்கு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பயிற்சி செயற்திட்டத்தில் இதுவரை 3 மாணவர்கள் இறந்துள்ளனர். அதுமட்டுமல்லாது 500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சியின்போது பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இந்தப் பயிற்சிப் பட்டறை மூலம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு உயிர் அச்சம் காணப்படுகின்றது. எனவே, இந்தத் தலைமைத்துவப் பயிற்சியை மஹிந்த அரசு நிறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்” – என்றார்.

Related Posts