Ad Widget

இராணுவம் போர்க்குற்றமிழைத்ததை உத்தியோகபூர்வமாக ரணில் ஏற்றுக்கொண்டதை வரவேற்கிறது கூட்டமைப்பு!

போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் இராணுவத்தினர் என இருதரப்பினரும் போர்க்குற்றங்களையிழைத்துள்ளனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

“போரில் இராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையை நாட்டின் பிரதமர் முதன்முறையாக பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய விடயம்” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி மாநாடு நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. அதில் சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றினார்.

இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“போரின் போது இரு தரப்பினருமே குற்றமிழைத்தனர். அந்தக் குற்றங்கள் தொடர்பில் உண்மையைப் பேசி, அவற்றை மறந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் நேற்றைய தினம் தெரிவித்தார்.

இராணுவ வீரர்கள் எந்தக் குற்றங்களையும் இழைக்கவில்லை, அவர்கள் மனிதாபிமானப் போரையே நடத்தினர் என்று இதுவரை காலம் இலங்கை அரசு கூறிவந்த்து. எனினும் முதன்முறையாக நாட்டின் பிரதமர் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களையிழைத்தனர் என்ற உண்மையை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. தற்போது இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ தெரியவில்லை.

அவருக்கு குற்ற உணர்வு ஏற்பட்டதோ? சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளதால் உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதோ தெரியவில்லை.

போர் முடிவடைந்து அடுத்த வருடமே ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் பல நாடுகள் இணைந்து இலங்கை அரசு பயங்கரவாதத்தை தோற்கடித்ததற்கு பாராட்டுத் தெரிவித்திருந்தது.

ஆனால் இன்று இலங்கை அரசு தனது இராணுவமும் போர்க்குற்றங்களையிழைத்தது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

Related Posts