Ad Widget

இராணுவத் தேவைக்கு காணி அளவீடு, மக்கள் கடும் எதிர்ப்பு

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டு முள்ளிப் பகுதியில் இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் நோக்கில் அளவீட்டுப்பணிக்காகச் சென்றிருந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்பால் அந்த நடவடிக்கையைக் கைவிட்டுத் திரும்பிச்சென்றனர்.

இன்று காலை நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அந்தக் காணிகளை அளப்பதற்குச் சென்றிருந்தன. எனினும், காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் அங்கு கூடியதால் அளவீட்டுப் பணிகளுக்கு எதிர்ப்பு வலுத்தது.

இதனையடுத்து அந்தப் பணியை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர் அதிகாரிகள். குறித்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பெருமளவான பொலிஸாரும் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டு முள்ளிப் பகுதியில் இராணுவத் தேவைக்காக மூன்று பரப்புக்கும் அதிகமான நிலப்பகுதி இராணுவத் தேவைக்காக இன்றைய தினம் குறித்த காணி உரிமையாளருக்கு தெரியாமல் அளவீடு செய்யப்படவிருந்தது.

இதனை அறிந்து தாம் குறித்த பகுதிக்கு இன்று காலை வருகை தந்து பார்த்த போது காணி அளவீடு செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றது. அப்போது குறித்த பகுதியில் கூடிய பொது மக்களும் காணி உரிமையாளரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக காணி அளவீட்டை கைவிட்டு சென்றுள்ளனர்.

இதுவரை காலமும் இராணுவத் தேவைக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கும் போது உரிய காணி உரிமையாளருக்கு அறிவித்த பின்னரே காணி அளவீடு செய்வது வழக்கம்.

ஆனால் குறித்த கட்டைக்காட்டு முள்ளிப் பகுதி காணி உரிமையாளருக்கு தெரியாமல் அளவீடு செய்ய முயற்சி செய்யப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இராணுவத் தேவைக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.

Related Posts