Ad Widget

இராணுவத்தினருக்கு எதிராக அதிக முறைப்பாடு

‘எனது மகனை வானில், பச்சை சீருடையுடன் வந்திருந்தவர்கள் மன்னாரில் வைத்து கடத்தி சென்றனர்’ என பூநகரி நல்லூர் பகுதியை சேர்ந்த கந்தையா வேலாயுதம்பிள்ளை சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் முன்பாக காணாமற்போனவர்களின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நிகழ்வு பூநகரி பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்றது, இதன்போதே வேலாயுதம்பிள்ளை இவ்வாறு சாட்சியமளித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

விடுதலைப்புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஆட்களை இணைக்கின்றார்கள் என்பதனால், பூநகரியில் இருந்த எமது மகனை மன்னாரிலுள்ள எனது சகோதரியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன்.

இந்நிலையில் 2008ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி பச்சை சீருடையுடன் வந்தவர்களால் என மகன் கடத்தப்பட்டார்.

இது தொடர்பில் அருகிலுள்ள மன்னார் உப்புக்குளம் இராணுவ முகாமில் விசாரணை செய்த போது, அவ்வாறு யாரையும் பிடித்து வரவில்லையென கூறினார்கள்.

தனது மகன் உயர்தர பரீட்சை எழுதிவிட்டு இருக்கும் போதே காணாமற்போயிருந்ததாகவும், இன்று வரை தனது மகன் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லையெனவும் கூறினார்.

“முன்னரங்கு காவலரனில் வைத்து எனது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்”

தனது மகனை விடுதலைப்புலிகள், மன்னார் முள்ளிக்குளம் முன்னரங்கு காவலரனில் நிறுத்தி வைத்திருந்த போது இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் பிடிபட்டதாக பூநகரி மரக்குறிஞ்சி பகுதியை சேர்ந்த நாகமுத்து குணசேகரம் சாட்சியமளித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

எனது மகன் 2007 ஆம் ஆண்டு 1 ஆம் மாதம் விடுதலைப்புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உட்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து எனது மகன் மன்னார் முள்ளிக்குளம் முன்னரங்கு காவலரனில் ஐவரில் ஒருவராக நிறுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது, இராணுவத்தினர் சுற்றிவளைத்த வேளை ஐவரில் ஒருவர் தப்பித்து வந்துவிட மிகுதி நால்வரும் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் எனது மகனும் ஒருவர் ஆவார்.

தொடர்ந்து எனது மகனை கொழும்பில் வைத்து கண்டதாக உறவினர் ஒருவர் எனக்கு தெரிவித்திருந்தார். இருந்தும், இதுவரையில் எனது மகன் பற்றி எவ்வித தகவல்களும் இல்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

சாட்சியளிக்கும் இடத்திலிருந்து இராணுவம் நீக்கம்

பிள்ளைகள் உயிர் வாழ்கிறார்களென இன்னும் நம்புகிறீர்களா என சாட்சியங்களிடம் கேள்வி

Related Posts