Ad Widget

இராணுவத்தினரின் தேவைக்காக தமிழர்களுடைய நிலங்கள் பறிபோகின்றது

வடக்கில் தனியார்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் தங்களுடைய தேவைக்காக அளவீடு செய்யும் நிகழ்சி நிரலை தொடர்ந்து செய்து வருகின்றனர் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

p-kajatheepan

வலி .வடக்கில் இன்று இடம்பெற்ற காணி அளவீடு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வலி .வடக்கில் தொடர்ந்து காணிகள் அபகரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடற்படையினர் தற்போது தங்கியுள்ள இடங்களின் சொந்தக்காரர்களை ஏதோ ஒருவகையில் ஏமாற்றி இந்த பிரதேசங்களை தங்களுக்கு தருவதாக சம்மதக் கடிதம் தந்துள்ளதாக கடற்படை கூறுகின்றனர்.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாது .இது ஒரு மோசமான முன்னுதாரணமாகும். இதன் மூலம் நாங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தும் விடயம் என்னவெனில் மக்களுடைய காணிகளை அபகரிக்க இராணுவத்தினர் மேற்கொள்ளும் ஒரு முயற்சியாகவே இதனை பார்க்கின்றோம்.

இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்ற போது பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்களின் நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுமானால் முதலில் இந்த பிரதேசங்கள் அனைத்தும் இராணுவ மயமாகும்.

அதனைத் தொடர்ந்து தமிழர்களுடைய குடிப்பரம்பல் சிதைக்கப்படும் அதன்பின்னர் சிங்கள மயமாக்கல் செயற்பாடும் இடம்பெறும்.

இதனால் தமிழர்களுடைய குடிப்பரம்பலில் மாற்றம் ஏற்படும் இது தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts