Ad Widget

இரண்டு இடங்களில் பணிபுரியும் முடிவினைப் பரிசீலனை செய்ய வேண்டும்

பொது சுகாதார பரிசோதர்களை 3 நாட்கள் பிரதேச சபைகளிலும், 2 ½ நாட்கள் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையிலும் கடமையாற்றுமாறு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கடந்த வியாழக்கிழமை (08) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் சுகாதார அமைச்சரின் முடிவினை 100 வீதமாக ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், இது தொடர்பாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டு, சங்கத்தின் ஊடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தப்படுமென்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோருக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் கடந்த வியாழக்கிழமை (08) வடமாகாண சபையில் இடம்பெற்றது.

இதன்போது, மார்ச் 17 ஆம் திகதிகளிலிருந்து வெளிக்களப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் சுகாதார திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

பொதுமக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு மேற்படி தீர்மானத்தினைப் பரிந்துரைத்த சுகாதார அமைச்சர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை வெளிக்களப் பணிக்கு செல்லுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இது பற்றித் மேலும் தெரியவருவதாவது,

தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரிக்கும் தெல்லிப்பளை பிரதேச சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக பிரதேச சபைகளின் கீழுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றும்படி சுகாதார வைத்தியதிகாரிகள் போராட்டம் நடத்தினார்கள்.

அதற்கமைய வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி குறித்த (தெல்லிப்பளை, உடுவில், சங்கானை, நல்லூர் பிரதேச சபைகளில்) பிரதேச சபைகளில் கடமையாற்றி வந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும்படி உத்தரவிட்டார்.

எனினும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் பணிபுரியும் 70 இற்கும் மேற்பட்ட பொதுச் சுகாதார வைத்தியதிகாரிகள் வெளிக்களப் பணிப்புறக்கணிப்பில் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் கீழிருந்து சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றப்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களையும் மீண்டும் பிரதேச சபைகளுக்கு விடுவிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏப்ரல் 2 ஆம் திகதி உத்தரவிட்டார்.

எனினும், பிரதேச சபைகளின் கீழ் காடர் (பணியாற்றுவதற்கான அனுமதி) ஏற்படுத்தும் வரையிலும் தங்கள் போராட்டத்தினை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இதனால் சந்தைகள், இறைச்சிக்கடைகள் என்பன சுகாதாரச் சீர்கேடான முறையில் இயங்கி வந்தன.

இந்நிலையில் குறித்த விடயத்தினை முடிவுக்கு கொண்டு வந்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை மீண்டும் கடமைக்குத் திரும்ப வைப்பது தொடர்பான கலந்துரையாடல் வியாழக்கிழமை (08) வடமாகாண சபையில் இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவினை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் உடனடியாக ஏற்கவில்லை. தங்கள் தாய்ச்சங்கத்துடன் கலந்துரையாடியே முடிவு சொல்வதாகத் தெரிவித்துள்ளனர்.

Related Posts