Ad Widget

இரணைமடுக்குளத்தின் முதல் உரிமை கிளிநொச்சி மக்களுக்கே – வடக்கு ஆளுநர்

கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரித்தான இரணைமடுக்குளத்தின் நீரை பயன்படுத்தும் முதல் உரிமை கிளிநொச்சி மக்களுக்கே உள்ளதென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை கிளிநொச்சி விவசாயிகள் வடக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்குறித்த விடயத்தைக் கூறினார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த ஆளுநர் “இரணைமடு குளத்திலுள்ள தண்ணீர் கிளிநொச்சி மக்களுக்கு உரியதாகும். அக்குளத்தின் தண்ணீரை அம்மக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். இருப்பினும் யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கும் தண்ணீர் தேவையுள்ளது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

தண்ணீருக்கு உரித்துடையவர்கள் அந்த தண்ணீரை வீண்விரயமாக்காமல் பயன்படுத்திவிட்டு, வேறு மாவட்டங்களில் தண்ணீர் தேவை உடையவர்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும் என்பதே சர்வதேச நீதியாகும்.

இதேவேளை வடக்கின் ஜந்து மாவட்டங்களிலும் எங்கு நீர் உள்ளது, அதனை எவ்வாறு சேமித்து மக்களின் தேவைகளுக்காக பயன்டுத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.

இக்குழுவில் விவசாய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 3 பெண்கள் உட்பட 5 பேர் மாவட்டங்களின் அடிப்படையில் உள்ளடக்கப்படுவார்கள்.

அந்தவகையில் கிளிநொச்சி விவசாயிகளுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இவ்வருட சிறுபோக செய்கைக்காக இரணைமடுக்குளத்திலுள்ள நீரை விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ்ப்பாணத்து மக்களின் நீர் தேவையை பூர்த்திசெய்வதற்காக வடக்கில் வீண்விரயமாக்கப்பட்டு கடலுடன் கலக்கும் நன்னீரை எவ்வாறு சேமித்து மக்களுக்கு வழங்க முடியும் என்பது தொடர்பில் ஆராய்ந்து எதிர்காலத்தில் நீர் தேவைகளை முழுமையாக நிர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கிளிநொச்சியில் உள்ள விவசாயிகள் தமது பிரச்சினைகளோ அல்லது நீர் முகாமைத்துவம் தொடர்பான கருத்துக்களை அக்குழுவிடம் முன்வைக்க முடியும்.

வடக்கு மக்களின் தேவைகளை முழுமையாக தீர்த்துக்கொள்வதற்கான நீர் வளம் இங்கு உண்டு. அந்த நீரை பராமரித்து மக்களுக்கு வழங்குவதிலேயே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts