Ad Widget

இயற்கையோடு இணைந்து இசைவுற வாழ்தலே இயற்கைப் பேரழிவுகளிலிருந்து தப்புவதற்கான வழிமுறையாகும் -பொ. ஐங்கரநேசன்

தற்போதைய மனிதனைவிட புத்திக்கூர்மையுள்ள மனிதன் பரிணாம வளர்ச்சியின்போது எதிர்காலத்தில் தோன்றினாலும் அவனாலுங்கூட இயற்கையை ஒருபோதும் வெல்லமுடியாது. இயற்கையோடு இணைந்து இசைவுற வாழ்தலே இயற்கைப் பேரழிவுகளிலிருந்து நாங்கள் தப்புவதற்கான ஒரே வழிமுறையாகும். எங்கள் தலைமுறையில் நாங்கள் சந்தித்த மிகக்கொடிய பேரனர்த்தமான கடற்கோளின் நினைவு நாளில் இயற்கையோடு இசைவுற இணைவோம் என்பதை ஒரு சபதமாக ஏற்றுச் செயற்படத் தொடங்குவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கடற்கோள் நினைவுநாளை முன்னிட்டு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

புயலும் மழையும் வெள்ளமும் இயற்கையின் வழமையான சீற்றங்கள்தாம் எனினும், சமீபகாலமாக இயற்கை தன் சீற்றங்களை கொடுஞ்சீற்றங்களாக வெஞ்சினத்தோடு வெளிப்படுத்தி வருகின்றது. வருடமொன்றில் மையங்கொள்ளும் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு அவை கடும் வேகமும் எடுத்திருக்கின்றன. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியில் பெரும் மாற்றங்கள் எற்படாதபோதும் வருடம் பூராவும் பெய்ய வேண்டிய மழை ஒருசில நாட்களிலேயே கொட்டித்தீர்க்கின்றது. பிரளயம்போல எங்கும் வெள்ளக்காடாகிறது.
வாயுபகவான், வருணபகவான் என்று இயற்கையைப் பூசித்த நாங்கள, இன்று இயற்கையோடு முரண்பட்டு நிற்பதே இயற்கையின் ஆவர்த்தனம் தப்பிய காலநிலைக்கான அடிப்படைக் காரணமாகும். நாங்கள் காடுகளையெல்லாம் கபளீகரம் செய்வதாலும் சுவட்டு எரிபொருட்களை வரம்பின்றி எரித்துத்தள்ளுவதாலும் வளியில் வரம்பு கடந்துசெல்லும் கரியமிலவாயுவால் பூமி சூடேறத் தொடங்கியுள்ளது. இந்த வெப்பநிலை அதிகரிப்பே காலநிலையில் பாதகமான மாற்றங்களை அரங்கேற்றி வருகின்றது.

இயற்கை தன் சீற்றங்களை பேரனர்த்தங்களாக வெளிப்படுத்துவதற்கு நாங்களே காரணமாக இருந்தபோதும் இயற்கை எங்கள் மீது தீராதபகை கொள்வதில்லை. இயற்கை பேரனர்த்தங்களை நிகழ்த்துந்தோறும் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் எங்களுக்குக் காட்டியே செல்கின்றது. கடற்கோள் இலங்கையை 2004 , டிசம்பர் 26 அன்று தாக்கியபோது அம்பாந்தோட்டையில் கண்டல் காடுகள் அழிக்கப்பட்ட வாண்டுறுப்பா கிராமத்தில் 6000 உயிர்கள் வரை பலியெடுத்தபோதும், கண்டல்கள் அடர்ந்திருந்த கப்புஹென்வல கிராமத்தில் இரண்டே இரண்டு உயிர்களை மட்டுமே பறித்திருந்தது.

இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் என்று இயற்கை உரக்கப்போதித்தாலும் நாங்கள் செவிமெடுப்பதாக இல்லை. நாங்களே இயற்கையை ஆளப்பிறந்தவர்கள் என்ற மமதையில் இயற்கையைத் தொடர்ந்தும் அடிமைப்படுத்துகிறோம். நிலத்திற்கு நீரைப்பருக்கும் வாய்களான குளங்களை இறுக்கி மூடியும், வெள்ளவாய்க்கால்களைக்கூட விட்டுவைக்காமல் கம்பள வீதிகளாக்கியும், சதுப்பு நிலங்களைக் குடியிருப்புகளாக்கியும் இயற்கையை எமக்கு ஏற்றவகையில் கட்டமைத்து வருகிறோம்.

தற்போதைய மனிதனைவிடப் புத்திக்கூர்மையுள்ள மனிதன் பரிணாம வளர்ச்சியின்போது எதிர்காலத்தில் தோன்றினாலும் அவனாலுங்கூட இயற்கையை ஒருபோதும் வெல்ல முடியாது. இயற்கையோடு இணைந்து இசைவுற வாழ்தலே இயற்கைப் பேரழிவுகளிலிருந்து நாங்கள் தப்புவதற்கான ஒரே வழிமுறையாகும். எங்கள் தலைமுறையில் நாங்கள் சந்தித்த மிகக்கொடிய பேரனர்த்தமான கடற்கோளின் நினைவு நாளில் இயற்கையோடு இசைவுற இணைவோம்; என்பதை ஒரு சபதமாக ஏற்றுச் செயற்படத் தொடங்குவோம்.

இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புள்ளாகியிருக்கும் எங்கள் உறவுகள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும், பேரனர்த்தங்களின்போது காவுகொள்ளப்பட்ட ஆன்மாக்கள் சாந்தியடையவும் இயற்கை என்ற பேராற்றலை இறைஞ்சுவோமாக – என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

Related Posts