Ad Widget

இன்று முதல் மீண்டும் மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று முதல் மீண்டும் இடைநிறுத்துவதற்கு எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நிலவும் அந்நிய கையிருப்பு நெருக்கடி காரணமாக மசகு எண்ணெய் கொள்முதல் செய்வதில் எழுந்துள்ள சிக்கல்களின் விளைவாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தேவையான மசகு எண்ணெயை பெற்றுக் கொண்டதன் பின்னர் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிக்குள் அதன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாகம் தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு மசகு எண்ணெய் வழங்குவதற்கான நீண்ட கால ஒப்பந்தம் பெற்றுள்ள சிங்கப்பூர் நிறுவனம், ஜனவரி 25 முதல் விநியோகத்தை தொடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என எரிசக்தி அமைச்சு பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில் மேற்படி சப்புகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் கடந்த 2021 நவம்பர் 15 அன்று முதற் தடவையாக இடைநிறுத்தப்பட்டது.

தொடர்ச்சியாக 50 தினங்களுக்கு மேற்படி சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலும் 22 நாட்களின் பின்னர், டிசம்பர் 7 ஆம் திகதி மீண்டும் அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts