தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் இன்று காலை பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அளவீடு செய்யும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் அளவீடு செய்வது எனவும், அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டுமென கடந்த 11ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்றையதினம் காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர், விகாரை காணியினை சட்டவிரோதமாக அளவீடு செய்ய முயல்வதாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் நேற்றிரவு மூன்று பேருந்துக்களில் தென்னிலங்கையில் இருந்து, விகாரை வழிபாட்டிற்கு என பலர் வருகை தந்து விகாரையில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய தினம் காலை பலாலி பொலிஸார் விகாரை அமைந்துள்ள பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தமது காணிகளை அடையாளம் காட்ட என காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு வந்துள்ளனர்.
எனினும்காலை 09.30 மணி வரையில், காணி அளவீட்டு பணிகளுக்கு காணிகளை அடையாளம் காட்ட வருமாறு காணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்த கடற்தொழில் அமைச்சர், மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலர் உள்ளிட்ட எவரும் அவ்விடத்திற்கு வருகை தராத நிலையில், காணி உரிமையாளர்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகியுள்ளது.
காணி அளவீட்டு பணிகள் தொடர்பில் புத்த சாசன அமைச்சோ , மாவட்ட செயலரோ தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தல் எதனையும் வழங்கவில்லை. உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இல்லாமல், விகாரை காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது என விகாராதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.