Ad Widget

இன்று பதவியேற்கிறார் ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இன்று பிற்பகலுக்கு மேல் பதவியேற்கவுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிமையான பதவியேற்பு விழாவின்போது அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.

o-panneerselvam

முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார்.

அமைச்சரவை பதவியேற்பு எந்த நேரத்தில் நடைபெறும் என்று தெரியவில்லை. ஆனால் பிற்பகல் 12 மணிக்கு மேல் பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிகிறது.

அ.தி.மு.க. பொருளாளராக இருந்து வரும் 63 வயதான ஓ.பன்னீர்செல்வம் நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தனது சகாக்களுடன் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

அதைத் தொடர்ந்து ஆட்சியமைக்க வருமாறு பன்னீர் செல்வத்திற்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தவர் ஓ.பன்னீர் செல்வம். பி.ஏ. படித்துள்ள இவர் பெரியகுளம் நகராட்சித் தலைவராகவும், நகர அ.தி. மு.க. செயலாளராகவும் பதவி வகித்து உள்ளார்.

2001-ம் ஆண்டு பெரியகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் அப்போது வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் டான்சி நில வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றபோது, 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல் 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை முதல்வராகப் பணியாற்றினார்.

பின்பு ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றவுடன், பொதுப்பணி, மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

2006-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெரியகுளம் சட்டசபை தொகுதியில் இருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் எதிர்க் கட்சி தலைவராக பணியாற்றினார். கடந்த சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார்.

2-வது முறையாக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் என்ற 2 மகன்களும், கவிதாபானு என்ற மகளும் உள்ளனர்.

Related Posts