Ad Widget

இன்று காலை கடல் திடீரென உள்வாங்கியது: சுனாமி அச்சத்தில் மக்கள்!!

தமிழ்நாட்டை 2004ம் ஆண்டு சுனாமி பேரலைகள் தாக்கிய பிறகு வங்கக்கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக வங்கக்கடலின் நீரோட்ட திசையில் மாற்றம் ஏற்படுகிறது.

201606131204297161_Bay-of-Bengal-Sea-water-intakes-in-Chennai_SECVPF.gif

தற்போது வங்கக்கடலில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கடுமையான நீரோட்டம் காணப்படுகிறது. இந்த கடும் நீரோட்டம் காரணமாக தமிழக கடலோரப்பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த கடல் சீற்றம் தொடர்ந்து அதிகரித்தப்படி உள்ளது. இது மீனவர்கள் வாழ்வாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில்தான் 45 நாள் மீன்படி தடைகாலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்லத் தொடங்கியிருந்தனர். ஆனால் கடல் சீற்றம் நீடிப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடல் சீற்றம் காரணமாக கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள், மீன்பிடி வலைகளும் சேதம் அடைந்துள்ளன. கடல் சீற்றத்துக்கு சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரம் கடலோரப்பகுதி மக்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

கடந்த வாரம் 10 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்து கரையை தாக்கியது. இதனால் சீனிவாசபுரத்துக்குள் கடல் நீர் புகுந்தது சுமார் 50 வீடுகள் பாதிக்கப்பட்டன

கடல் சீற்றம் நீடித்ததால் சீனிவாசபுரத்தில் இருந்து பலர் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறி விட்டனர். அப்பகுதி மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர்.

கடல் நீரோட்டம் தொடர்வதால் கடல் சீற்றம் மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் சென்னை கடலோரப் பகுதி மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் திடீரென கடல் உள்வாங்கியது கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் 10 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்ளே சென்றது. மேலும் சீற்றமும் குறைந்தது. ஆனால் சிறிது நேரம் கழித்து கடல் அலைகளின் சீற்றம் மீண்டும் அதிகரித்தது. இந்த மாற்றத்தால் கடலோர மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக சீனிவாசபுரம் பகுதி மக்களிடம் சுனாமி பீதி ஏற்பட்டது. இது குறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:-

2004ல் சுனாமி தாக்கிய போது இப்படித்தான் கடல் உள்வாங்கியது இன்றும் திடீரென கடல் உள் வாங்கியதால் பயமாக உள்ளது.

கடல் சீற்றம் காரணமாக வெளியேறிவர்கள் இந்த மாற்றத்தால் மேலும் பீதி அடைந்துள்ளனர். அவர்கள் வீடுகளுக்குத் திரும்பி வர தயங்கியபடி உள்ளனர். எனவே அரசு இதில் ஏதாவது செய்து எங்களுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts