Ad Widget

இந்திய மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இந்திய மீனவர்களும் தங்களை விடுவிக்கக்கோரி, புதன்கிழமை (03) காலை தொடக்கம் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக மூர்த்தி தொடர்ந்து கூறுகையில்,

உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை சந்தித்த போது, தங்களை விடுவிக்கும் திகதியை அறியும் வரையில் தாங்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறினார்கள்.

இதனையடுத்து, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு ஆகியவற்றுடன் சந்திப்பை மேற்கொண்டு, மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி மாதகலுக்கு அண்மித்த கடற்பரப்பில் 4 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும், செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி எரிபொருள் தீர்ந்த நிலையில் ஒரு படகுடன் நெடுந்தீவில் கரையொதுங்கிய 4 இந்திய மீனவர்களும், ஒக்டோபர் 7ஆம் திகதி கச்சதீவு பகுதியில் காற்றால் கரையொதுங்கிய 4 இந்திய மீனவர்களும், நவம்பர் 23ஆம் திகதி நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts