Ad Widget

இந்திய நாடாளுமன்றில் புகை குண்டு வீச்சு! இருவர் கைது!

இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி மக்களவைக்குள் அத்துமீறி இருவர் நுழைந்ததால் அவைக்குள் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இன்று (டிசம்பர் 13) நாடாளுமன்றம் தாக்குதல் தினமாகும். 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி லக்ஷர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய குழுக்களைச் சேர்ந்த 5 பேர் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாக்கத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மக்களவை தலைவர் ஓம்.பிர்லா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்பிறகு மக்களவை தொடங்கி நடைபெற்று வந்தது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர் பாதுகாப்பு வளையத்தையும் மீறி மக்களவைக்குள் நுழைந்தனர்.

எம்.பி.க்கள் அமர்ந்திருந்த இருக்கைகள் மற்றும் டேபிள்கள் மீது தாவிச் சென்ற அவர்கள் கையில் இருந்த வண்ண புகை குண்டுகளை வீசினர். அதில் இருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியது. இதனால் மக்களவை பரபரப்பானது.

அவர்கள் இருவரையும் எம்.பி.க்களே சுற்றி வளைத்துப் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். உடனடியாக அவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அத்துமீறி நுழைந்தவர்கள் ஹரியானாவைச் சேர்ந்த நீலம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமோல் ஷிண்டே என்பது தெரியவந்துள்ளது. இருவரிடமும் பாதுகாவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Related Posts