Ad Widget

இந்திய எடுபிடிகளான கூட்டமைப்புடன் மோடி உடன்படுவதில் வியப்பேயில்லை!- கஜேந்திரகுமார்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துகளுடன் புதிய இந்தியப் பிரதமர் மோடி நூற்றுக்கு நூறு வீதம் உடன்பட்டுப் போகின்றார் என்று அவரே கூறினார் எனத் தெரிவிக்கப்படுவதில் எமக்கு வியப்பு ஏதுமில்லை. ஏனென்றால் புதுடில்லியின் விருப்பப்படி, அவர்களின் நிகழ்ச்சி நிரல் பிரகாரம், இந்திய எடுபிடிகளாகவே கூட்டமைப்பினர் செயற்படும் போது, அப்படித்தானே உடன்பாடு இருக்கமுடியும்..!” – இவ்வாறு தெரிவிக்கின்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

kajrndakumar

நேற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில், ஐ.நா. விசாரணைகள் தொடர்பாகத் தமிழ் மக்கள் சாட்சியமளிப்பதற்கான வழிகாட்டல் தகவல்கள் மற்றும் அது தொடர்பான மாதிரி விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து வெளியிட்டு வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:-

பிரதமர் மோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நூற்றுக்கு நூறு வீதம் தாம் ஒத்துப் போகிறார் என்று கூறினார் என சம்பந்தர் ஐயா மட்டுமல்லர், அவருடன் புதுடில்லிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்த ஏனைய கூட்டமைப்பினரும் கூட தெரிவித்துள்ளனர். அதற்கு மேலதிகமாக – நீங்கள் (செய்தியாளர்கள்) இங்கு குறிப்பிட்டபடி – புலம்பெயர் தமிழர்கள் பிரிவினையைக் கைவிட வேண்டும் என்ற செய்தியை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்ற சாரப்பட கருத்தை சம்பந்தர் ஐயாவும் வெளியிட்டுள்ளார்.

தமிழ்க் கூட்டமைப்பின் கருத்துடன் பிரதமர் மோடி நூற்றுக்கு நூறு வீதம் ஒத்துப் போகின்றார் என்ற செய்தி குறித்து நாங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏனெனில் தமிழ்க் கூட்டமைப்பினருடைய அத்தகைய கருத்தும் செயற்பாடுகளும் இன்று புதுடில்லியினுடைய விருப்பத்தின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. அதன் இன்னொரு வெளிப்பாடுதான் – இன்னொரு உதாரணம்தான் – புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் இன்று கருத்துக்களை வெளிப்படுத்துவதும் ஆகும். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கடுமையாக விமர்சிப்பதற்கான ஒரு மிக முக்கிய காரணம், அவர்கள் தமிழ் மக்களின் நலனுக்கு உகந்த ஒரு நிகழ்ச்சி நிரலை முன் வைக்காது, அதற்குப் பதிலாக வெறுமனே இந்தியா கூறுபவற்றை – கேள்வி எதும் எழுப்பாது – அப்படியே ஏற்றுச் செயற்படும் போக்குதான் என்பது உங்களுக்குத் தெரியும்.

எம்மைப் பொறுத்தவரை நாம் இந்தியாவோடு – அதன் மத்திய அரசோடு – முரண்பட்டு, அவர்களை எதிரிகளாகப் பார்க்கக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. அதில் நாம் தெளிவாக இருக்கிறோம். அதேசமயம் எங்களுடைய நலன்கள் என்ற அடித்தளத்தைப் பேணிக் கொண்டுதான் நாங்கள் யாருடனும் அணுக வேண்டும் அல்லது பேரம் பேச வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு. அப்படியில்லாமல், வேறு தரப்புகள் கூறுகின்ற கருத்துக்களின் பிரகாரம், கேள்வி ஏதும் எழுப்பாமல், கண்ணை மூடிக்கொண்டு, அந்தக் கருத்துக்களை உள்வாங்கி, அவற்றின் அடிப்படையில் செயற்படத் தொடங்கினால் எங்கள் நலன்கள் அதில் பூர்த்தியடைய மாட்டாது, அந்தத் தரப்பின் நலன்கள்தாம் பூர்த்தியடையும் என்பதே எமது கருத்து.

எங்களைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுடில்லி விஜயம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிக முக்கிய விஜயமாக, அவர்களின் நலன்களை சிறந்த முறையில் பேணக்கூடிய ஒரு விஜயமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், அப்படியில்லாமல், வெறுமனே இந்தியா விரும்பியதை ஏற்று, இந்தியாவின் விருப்பத்தைத் தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற ஒரு வேலைத் திட்டத்தின் அடிப்படையில் கூட்டமைப்பு நடந்து கொள்வதுதான் மிகவும் துரதிஷ்டவசமானது,கடுமையான ஏமாற்றத்தைத் தருவதாக அமைந்துள்ளது.

இந்த உண்மைகளின் விளைவுகளை எமது மக்கள் எதிர்காலத்தில் அறிவார்கள். இன்னொரு விடயமும் உள்ளது. புதுடில்லி விஜயத்தின் போது ( இலங்கைக்கு எதிரான) ஐ.நா. விசாரணை விவகாரம் குறித்து தமிழ்க் கூட்டமைப்பும் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. இந்தியாவும் அது குறித்து எதுவும் கூறவில்லை. இதனை கூட்டமைப்பின் தலைவரும் ஏனையோரும் கூறியிருக்கின்றார்கள். கடந்த மார்ச் மாதம் ஐ.நா.வில் இந்தத் தீர்மானம் வந்தபோது இந்தியா அதற்கு ஆதரவு தரவில்லை. மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசே ஆதரவு தருவதில்லை என்ற முடிவை எடுத்துச் செயற்பட்டது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, புதிய மோடி அரசு வந்ததும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இந்தத் தீர்மானத்தை இந்தியா எதிர்க்காமல் விட்டமை – அந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் விட்டமை – மிகப் பெரிய தவறு என்பது புதிய அரசின் கருத்தாக வெளிப்பட்டது.

அதாவது இலங்கைக்கு எதிரான விசாரணைப் பொறிமுறையை இந்தியா முழு அளவில் எதிர்த்திருக்க வேண்டும் என்ற கருத்தை மோடி அரசு வெளிப்படுத்தியது. இன்று, அந்தச் சூழலில்தான் – நாங்கள், எமது மக்கள் ஐ.நா. மனித உரிமைகள் விசாரணைக் குழு முன் ஒக்ரோபர் 30 ஆம் திகதி வரை சாட்சியமளிக்க வேண்டிய காலத்தில்தான் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த விஜயம் இடம்பெற்றிருக்கின்றது. அதுவும் அந்த விசாரணையை முழுமையாக எதிர்க்கின்ற நாடாக இந்தியா இருக்கின்ற நிலையில் – அதுவும் நாட்டின் மிக முக்கியமான, முதலாவது தலைவரான பிரதமரைச் சந்திக்கின்ற நிலையில் – இந்தியாவின் அந்த நிலைப்பாடு தொடர்பாக எந்த ஒரு வார்த்தையும் போசாது இருப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் எடுபிடியாக செயற்படுகின்றதே தவிர, தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி எந்தவிமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. இதனை எமது மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

எவ்வளவு விரைவாக மக்கள் இதனைப் புரிந்து கொள்கின்றார்களோ அவ்வளவு விரைவாக அவர்களுக்கு நன்மை கிட்டும்.

கேள்வி :- அரச தரப்பைச் சார்ந்த கட்சிகள் தவிர்ந்த வெளியே இருக்கின்ற தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து, அரசியல் தீர்வுக்கான பொதுவான முன்மொழிவை வைக்குமாறு புதுடில்லிப் பயணத்தின் போது தமிழ்க் கூட்டமைப்புக்குக் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – தமிழ்த் தேசிய மக்க்ள முன்னணி ஆகியன பொது இணக்கப்பாட்டின் கீழ் செயற்படுவதற்கான முன் முயற்சி ஏதும் புதுடில்லியின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளதா?

பதில் :- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பலர் நீண்ட காலமாக எங்கள் கட்சியினருடன் தொடர்புகொண்டு நாங்கள் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றார்கள். நாங்கள் ஒன்றுபடுவதில் ஒரு பிரச்சினையுமில்லை கொள்கை ரீதியாக நாங்கள் செயற்பட முடியுமானால் நீங்கள் கேட்காமலேயே நாங்கள் வந்து இணைந்து செயற்படத் தயார் அல்லது நீங்களே வந்து எங்களுடன் சோரலாம் என்று அவர்கள் ஒவ்வொருவரிடமும் நாங்கள் கூறி வந்துள்ளோம்.

ஆனால் கொள்கை விடயத்தில் நாம் மிகத் தெளிவாக இருக்கின்றோம். அதுதான் நாங்கள் பிரிந்தமைக்குக் காரணமே. அதில் ஓர் இணக்கப்பாடு இல்லாமல் நாங்கள் பேசிப் பிரயோசனமில்லை என்று அவர்களிடம் நாம் கூறினோம். நாங்கள் இந்தக் கருத்தைத் தெரிவித்தபோது அவர்கள் ஒவ்வொருவரும் கொள்கையை விட்டுப் போட்டு வாருங்கள் என்றுதான் இதுவரைக்கும் கூறியிருக்கின்றார்கள். இவ்விவகாரத்தில் இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவிதமான கருத்தையும் கூறியிருப்பதாக நாங்கள் அறியவில்லை. எது, எப்படியென்றாலும் அடிப்படைக் கொள்கை விடயத்தில் நாம் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை.

கேள்வி :- ஐ.நா.விசாரணைக்கு மக்கள் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து இப்போது அறிவித்திருக்கின்றீர்கள். இதற்கான பாதுகாப்புச் சூழல் மக்களுக்கு இருக்கின்றதா?

பதில் :- நாங்களே அரசினால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். எனவே, நாங்கள் எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதத்தையும் மக்களுக்கு வழங்கமுடியாது. ஆனால் பயம் என்ற விடயத்துக்கு அப்பால், இன்று சர்வதேச சமூகத்தின் பார்வை இலங்கையை நோக்கி இருக்கின்றது. ஐ.நா. விசாரணை விவகாரம் சர்வதேச ரீதியில் பெருமளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. அத்தகைய சூழலில் ஸ்ரீலங்கா அரசின் ஒவ்வொரு செயற்பாடும் மிக நுணுக்கமாக அந்த நாடுகளால் அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பயம் என்பதற்கு அப்பால் எங்களுக்கும் ஒரு கடமை இருப்பதை நாம் மறந்துவிட முடியாது. நடந்த அநியாயங்களுக்கு நீதி கிடைப்பதன் ஊடாகவும், நடந்த அநியாயங்களை சரியான வழியில் நிரூபிப்பதன் வாயிலாகவும் அரசியல் ரீதியாக ஒரு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. எனவே, நாங்கள் தொடர்ந்தும், பயந்து ஒடுங்கி, அடக்கப்பட்டு வாழ்ந்து வரும் வாழ்க்கையிலிருந்து விடுபடுவதும் கூட, இந்தப் பணியில் நாம் செயற்பட்டு, முழுமையான சாட்சியங்களை வழங்கி, அதனை நிரூபிக்கும் விடயத்தில்தான் தங்கியும் உள்ளது. அடுத்தது, ஒரு சிலர் மட்டுமே இந்தப் பணியில் ஈடுபடுவார்களானால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். அவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பதும் சுலபமாகிவிடும். அதற்கு மாறாக ஒட்டு மொத்தமாகத் தமிழினமே அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவருமே, லட்சக்கணக்கில் ஒன்றிணைந்து இதில் ஈடுபட முன்வருவார்களானால், ஓர் அரசுக்கு அவர்கள் அனைவருக்கும் எதிராகச் செயற்பட முடியாது. பல நாடுகளில் அரசுக்கு எதிரான புரட்சிகள் வெற்றி பெற்றமைக்கு ஒட்டு மொத்த மக்கள் கூட்டமே கொந்தளித்து எழுந்தமைதான் பிரதான காரணமாக அமைந்தது. அது போன்றதுதான் இதுவும். ஆனால் நாங்கள் புரட்சி பற்றிப் பேசவில்லை. சர்வதேச சமூகத்தால் சட்ட ரீதியாக அறிவிக்கப்பட்ட – சர்வதேச சமூகத்தால் நியாயமானதாக எதிர்பார்க்கப்படுகின்ற – சர்வதேச சமூகம் நுணுக்கமாக பார்த்துக் கொண்டிருக்கின்ற சூழலில் – அந்த நீதியான நடவடிக்கையை ஒன்றுபட்டு முன்னெடுக்கும்படிதான் நாம் கோருகின்றோம். நாம் ஒன்று திரண்டு இதில் ஈடுபட்டால் எங்கள் ஒவ்வொருவருக்கும் எதிராக அரசினால் நடவடிக்கை எடுக்க முடியாது. இதுவிடயத்தில் எங்களின் முழு ஒத்துழைப்புதான் எங்களுக்கான பாதுகாப்புக் கவசமாக அமைய முடியும். – என்றார்.

Related Posts