Ad Widget

இசை மூலம் இறைவனை காணமுடியும் – இளையராஜா

ஈரோடு தமிழ் இலக்கிய பேரவை அறக்கட்டளை சார்பில் தமிழ் அறிஞர்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு “எஸ்.கே.எம். இலக்கிய விருது” வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ் இலக்கிய பேரவை அறக்கட்டளை தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் த.ஸ்டாலின்குணசேகரன் சிறப்பு விருந்தினர்களை பாராட்டி பேசினார். விழாவில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு கவிஞர் மு.மேத்தாவுக்கு “எஸ்.கே.எம். இலக்கிய விருது” வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த விழாவில் தெளிவான சிந்தனை என்று கூறினார்கள். அதிலும், ஒரு கருத்து வேறுபாடு உள்ளது. சிந்தனை இருந்தால் தெளிவு இருக்காது. சிந்தனை இல்லாமல் இருப்பதே தெளிவாக இருக்கும். இதேபோல் எந்த ஒரு விஷயத்தை பார்க்கும்போதும் தவறுதான் முடிவில் தென்படுகிறது. ஒருமுறை நடிகர் கமல்ஹாசன், நான் இசையமைக்காத ஒரு படத்தை பார்க்கும்படி என்னிடம் கூறினார்.

அந்த படத்தை பார்த்தால் அதில் உள்ள எதிர்மறையான கருத்துகளும், தவறுகளும் தான் எனக்கு தெரியும் என்று கூறிவிட்டு அந்த படத்தை நான் பார்க்க மறுத்துவிட்டேன். தெய்வத்தின் சன்னதியில் இருக்கும்போது அடையும் அமைதி எந்த பொருளாலும் தர முடியாது. இதேபோல் இசையும் உள்ளத்தில் ஊடுருவி மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இசை மூலம் இறைவனை காணமுடியும். அப்துல்கலாம் 4 லட்சம் மாணவ- மாணவிகளை தனித்தனியே சந்தித்த உன்னதமான மனிதர். எந்தவொரு அரசியல் தலைவராலும் முடியாத ஒரு விஷயத்தை அவர் செய்துள்ளார். அவர் வலியுறுத்திய “கனவு காணுங்கள்” வாசகம் மாணவ-மாணவிகள், இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. அந்த கனவு தூங்கவிடாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

இவ்வாறு இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

விழாவில் ஈரோடு வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக அறக்கட்டளை துணைத்தலைவர் க.முகம்மதுதாஜ் முகைய்தீன் வரவேற்று பேசினார். முடிவில் துணை செயலாளர் மு.கண்ணையன் நன்றி கூறினார்.

Related Posts