Ad Widget

ஆஸ்கார் விருது பெற்ற தமிழர்

கடந்த மாதம் 28-ந்தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தூத்துக்குடியை சேர்ந்த காட்டலாங்கோ லியோன் என்பவருக்கும் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது என்ற தகவல் இப்பொது வெளியாகி இருக்கிறது.

oscar-tamil

அறிவியல், தொழில் நுட்ப பிரிவில், காட்டலாங்கோ லியோனுக்கும், அவரது குழுவினருக்கும் கூட்டாக ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. விருது விழாவில் அவர் ‘அனைவருக்கும் நன்றி’ என கூறி தமிழ் கூறும் நல்லுலகை சிலாகிக்க வைத்திருக்கிறார்.

தற்போது சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க் நிறுவனத்தில் பணியாற்றி வரும் காட்டலோங்கோ லியோன் மற்றும் அவரது குழுவினர் ‘இட்வியூ’ என்ற மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த மென் பொருள், திரைப்படத்தை முப்பரிமான வடிவில் பகுதி பகுதியாக அலசி ஆராய்வதற்கு உதவுவதாகும்.

தூத்துக்குடியில் லூர்து- ராஜம் மரிய சிங்கம் என்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர், ஆசிரியை தம்பதியரின் மகனாக பிறந்த இவர், கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் பி.இ. பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்கா சென்று அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டம் பெற்றார். அதில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துறையில் நிபுணத்துவம் பெற்றார்.

ஆஸ்கார் விருது பெற்றிருப்பது குறித்து காட்டலாங்கோ லியோன் கூறும்போது, “அறிவியல் தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கார் விருது, குறிப்பிட்ட ஒரு படத்துக்கு உரித்தானது அல்ல. எல்லா படங்களுக்கும், ஸ்டூடியோக்களுக்கும் இந்த தொழில் நுட்பம் பயன்படும்” என்றார். மேலும், “எங்கள் பணிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இந்த விருது. இது மகிழ்ச்சியை தருகிறது. இட்வியூ என நாங்கள் உருவாக்கி இருப்பது சொத்து உபகரணம். எங்கள் கம்பெனிக்கு வெளியே நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் இது சவாலானது. திருப்தி அளிக்கக்கூடியது. நானும் எனது சகாக்கள் ராபர்ட் ராய், சாம் ரிச்சர்ட்ஸ் மற்றும் அனைவரும் இதில் பங்களிப்பு செய்திருப்பது பெருமிதம் தருகிறது” என்றார்.

ஜூராசிக் பார்க் படத்தின் தொழில் நுட்பம் தன்னை கவர்ந்ததாக கூறுகிறார் இவர்.

இப்போது இந்திய தொழில் நுட்ப கலைஞர்கள், மேற்கத்திய நாடுகளில் பெரிய நிறுவனங்களில் பணியாற்ற வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்தவண்ணம் உள்ளது என்கிறார் இவர்.

திருமணமான இவருக்கு ரூபா என்ற மனைவி, சுருதி என்ற மகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கல்வர் நகரில் வசித்து வருகிறார்கள்.

Related Posts