Ad Widget

ஆராதனையில் பங்கேற்றோர் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிக்குமாறு ஆளுநர் கோரிக்கை; தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை

சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த மதபோதகரின் தலைமையில் நடைபெற்ற ஆராதனை மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்றவர்களை உடனடியா தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதுடன் தங்களது விவரங்களை அருகில் உள்ள பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கேட்டுள்ளார்.

தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த மதபோதகருக்கு கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது வெளியுறவு அமைச்சின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ளது என வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேற்படி சுவிஸ் நாட்டில் இருந்து இந்த மாதம் பத்தாம் திகதி காலை வருகை தந்த அறுபத்தொரு வயதுடைய சுவிஸ் குடிமகனான மதபோதகர் சிவராஐ்போல் சற்குணராஐா, யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை நிகழ்விலும் வேறு சில நிகழ்வுகளிலும் பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இம்மாதம் பதினாறாம் திகதி மீண்டும் தனது நாட்டுக்கு சென்ற பின்னர் அங்கு அவருக்கு கோரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது சுவிஸ்சிலாந்தின் பேண் நகரில் உள்ள இன்செல்ஸ்பிற்றல் பல்கலைக்கழக வைத்தியசாலையில் கோரோனா வைரஸ் தாக்கத்துக்கான சிகிச்சையினை அவர் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்குறித்த போதகரின் தலைமையில் நடைபெற்ற ஆராதனை நிகழ்வுகளில் பங்கெடுத்த அனைவரும் தங்கள் வீடுகளில் உடனடியா தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதுடன் தங்களது விவரங்களை அருகில் உள்ள பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தங்களுடையதும் தங்களைச் சார்ந்தவர்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மிக அவசியமானதென்றாகும் – என்றுள்ளது.

Related Posts