Ad Widget

ஆரம்ப பிரிவு மாணவர்களை பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்டவரே அழைத்துச் செல்ல முடியும் – வடமாகாண கல்வி அமைச்சர்

வடக்கு மாகாணத்தின், பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை, பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்ட வர்களோ மட்டுமே வந்து அழைத்துச் செல்ல வேண்டும்” இவ்வாறு வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அறிவித்துள்ளார்.

மாணவி சிவனேஸ்வரன் ரெஜினாவின் படுகொலை தொடர்பாக அவர் வெளியிட்ட பத்திரிகைச் செய்திக் குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவி சிவனேஸ்வரன் ரெஜினா பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்ததன் பின்னர், ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, படுகொலை செய்யப் பட்டார்.

இத்தகைய துன்பகரமான சம்பவங்கள், எதிர்காலத்தில் நிகழாது இருக்க, சிறுபிள்ளைகள் தொடர்பான பெற்றோர்களின் விழிப்புணர்வு, அவசியமானதாகும். .எனினும் எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு இத்தகைய ஆபத்துக்கள் ஏற்படுவதைக் குறைக்கக் கூடிய வகையில் வடமாகாணக் கல்வி அமைச்சு தனது வரையறைகளுக்குள், நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளது.

வடக்கு மாகாணத்தின், பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை, பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்டவர்களோ மட்டுமே வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நடைமுறையைச் செயற்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.

இது எதிர்காலத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு நடைமுறையாகவும் இருக்கும்.

மேலும் ஆறு வயதுச் சிறுமிக்கு நேர்ந்த இக் கதியானது மிகுந்த அதிர்ச்சியையும், கலலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மிலேச்சத்தனமான படுகொலை தொடர்பில் பொலிஸார் விரைந்து செயற்பட்டுக் கொலையாளிகளையும், சூத்திதாரிகளையும் கைது செய்திருப்பதன் மூலம் தமது கடமையைச் சரிவரச் செய்து கொண்டிருப்பதை அறியமுடிகின்றது.

இந்த வேளையில் இச் சிறுமியின் படுகொலை தொடர்பில், பொலிஸார் நடுநிலையுடனும், நீதியாகவும் செயற்பட்டு அனைத்துக் குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய தண்டனை யைப் பெற்றுக் கொடுக்கும் கடமையைக் கூடிய விரைவில் நிறை வேற்ற வேண்டும் என வடமாகாணக் கல்வி அமைச்சு கேட்டுக் கொள்கின்றது.

எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நிகழாதிருக்க, பொலிஸாரினதும், நீதிமன்றத்தினதும் இந்தக் குற்றவாளிகள் மீதான நடவடிக்கையானது இத்தகையவர்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்க வேண்டும்.

இந்தத்துன்பகரமான சாவைத் தழுவிய சிறுமி,சிவனேஸ்வரன் ரெஜினாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கின்றோம் – என்றுள்ளது.

இதேவேளை, சிறுமியின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை பொலிஸார் விரைந்து செயற்பட்டு கைது செய்துள்ளனர் என மாகாண கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ள போதும், அவர்கள் 6 பேரையும் தாமே அடையாளம் காட்டி பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்ததாகவும் 5 பேர் நீதிக்குப் புறம்பாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் காட்டுப்புலம் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts