Ad Widget

ஆயுதம் தாங்கிய விமானங்கள் குறித்து ஐ.நா. மனித அமர்வில் இலங்கை அதிருப்தி

தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான உத்தியாக, சர்வதேச நாடுகள், விமானிகள் இல்லாத தன்னியக்க விமானம் மற்றும் ஆயுதம் ஏந்திய விமானங்களின் பாவனையை அதிகரித்து வருகின்றமை தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த விவகாரம் தொடர்பில் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 27ஆவது அமர்வில் ஆராயப்பட்டது. இதன் போதே ஆணைக்குழுவின் இந்த கொள்கைகளுக்கு ஆதரவளித்த இலங்கை இது தொடர்பில் தமது அதிருப்திகளையும் முன்வைத்தது.

சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகளால் ஏனைய நாடுகள் மற்றும் வளிமண்டலம் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்கள் காயங்களுக்கு உள்ளாவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கை கவலை தெரிவித்துள்ளது.

தீவிரவாதத்தை முறியடிப்பது மற்றும் இராணுவ நடவடிக்கையின் போது பயன்படுத்தப்படும் தன்னியக்க விமானம் மற்றும் ஆயுதமேந்திய விமானம் ஆகியவற்றின் பாவனை குறித்த குழுக்கலந்துரையாடல் 27ஆவது அமர்வில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இச்சந்தர்ப்பத்திலேயே சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமான சட்டங்களின் கொள்கைகளான முற்பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் தனிச்சிறப்பு ஆகியன மீறப்படுவதாகவும் இலங்கை கவலை தெரிவித்துள்ளது.

மோதல்களின் போது கண்மூடித்தனமாக ஏவப்படும் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆயுதமேந்திய விமானங்களினால் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சிவிலியன்கள் காயமடைவது குறித்து நாம் எமது ஆழ்ந்த கவiஷயைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று இலங்கை தனது அதிருப்தியை வெளிக்காட்டியிருந்தது.

இத்தகைய செயற்பாடுகளால் சிவிலியன்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வெளிப்படையாக பொறுப்புக்கூறும் விதத்தில் விசாரணை நடத்தப்படவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் நட்ட ஈட்டினை பெற்றுக்கொடுக்கவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ணின்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு, இலங்கை தனது முழுமையான ஆதரவினை வழங்கியது.

இதேவேளை, தீவிரவாத குழுக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் ஆயுதமேந்திய விமானங்களின் பாவனைகளானது சர்வதேச சமாதானத்திற்கு பாரிய அச்சுறுத்தாக அமையும் ஆகையினால் அவற்றை சாதாரணமாக விட்டு விடாது அவை குறித்தும் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியமெனவும் இலங்கை இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts