Ad Widget

ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக கூட்டுறவு விரைவில் மறுசீரமைக்கப்படும்

மத்திய அரசின் தலையீடுகள் இல்லாமல் வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய வகையில் மாகாண அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஒரேயொரு துறையாக இன்று வடக்கு மாகாண சபைக்கு இருப்பது கூட்டுறவுத்துறைதான். அந்தவகையில், ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் விதத்தில் கூட்டுறவுத்துறை விரைவில் மறுசீரமைக்கப்பட உள்ளது என்று வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார்.

7

கூட்டுறவு அமைச்சுக்குரிய மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து கடற்றொழில் மற்றும் விவசாயம் தொடர்பான கூட்டுறவு அமைப்புகளுக்கு முறையே மீன்பிடி வலைகள், நீரிறைக்கும் இயந்திரங்கள் போன்றவற்றை வழங்கும் நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை (27.12.2014) அமைச்சின் அலுவலகத்தில்நடைபெற்றது. மாகாணக் கூட்டுறவு ஆணையாளர் வ.மதுமதியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறாக அறிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கூட்டுடுறவுத்துறையின் பெருமகனார் வீரசிங்கத்தின் பெயரால் கம்பீரமாக ஒரு மண்டபத்தைக் கொண்ட வடக்கில் இன்று கூட்டுறவுத்துறை மிகவும் நலிவுற்ற ஒரு துறையாகப் பின்தங்கிவிட்டது. 1970களில் பண்டத்தரிப்பு கூட்டுறவு அமைப்பால் உருவாக்கப்பட்ட பன்ரெக்ஸ் என்னும் காற்சட்டைத்துணி மிகவும் பிரசித்தி பெற்றது. புடவை உற்பத்தி, கால்நடை வளர்ப்பு என்று பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருந்தது கூட்டுறவுத்துறை இன்று மற்றவர்களிடம் கடனும் நிவாரணமும் வேண்டி காத்துக் கிடக்கிறது.

9

கூட்டுறவின்மேல் நம்பிக்கையில்லாமல் அதிலிருந்து எமது சமூகமும் விலகிச் சென்று கொண்டிருக்கிறது. கூட்டுறவுத்துறையின் இந்தச் சரிவுக்குப் போர் மட்டுமே காரணம் அல்ல. உலக மயமாக்கலோடு வேகமாக வளர்ந்து வரும் தனியார் முதலீட்டை எதிர் கொள்ளத்தக்கவாறு கூட்டுறவு இயக்கம் வலுப்பெறவில்லை. பழைய சட்டங்களையும் யாப்பு விதிகளையும் கொண்டே கூட்டுறவு அமைப்புகள் இன்னமும் இயங்கிவருகின்றன. இவற்றில் உள்ள நெழிவுசுழிவுகள் நிர்வாகச் சீர்கேட்டுக்கும், ஊழலுக்கும், பொறுப்புக் கூறலின்மைக்கும் காரணமாக அமைந்து வருகின்றன. கூட்டுறவுச்சங்கங்களைக் குத்தகைக்கு எடுத்தது போன்று ஒருவரே பல வருடங்களுக்கு பதவியில் நீடிக்கும் பரிதாபம் இந்தத் துறையில் மட்டும்தான் உள்ளது.

அரசியல் கட்சிகளும் தங்களுக்கான வாக்குகளின் கூடாரமாகக் கூட்டுறவையே பயன்படுத்த நினைக்கின்றன. இந்நிலை மாற்றப்பட்டு, மக்களுக்கான இயக்கமாகக் கூட்டுறவுத்துறை மாற்றம் பெறவேண்டும். இந்த நோக்கத்தில் எமது முதல்வர் கூட்டுறவுத்துறையை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வு ஒன்றைச் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதன் முடிவுகள் இப்போது எனக்குத் தரப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டும் கூட்டுறவுத்துறை வல்லுநர்களின் அபிப்பிராயங்களைக் கொண்டும் வடக்கின் கூட்டுறவுத்துறை மீண்டும் மிடுக்கோடு நிமிர விரைவில் ஆவன செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts