Ad Widget

ஆந்திரப் பிரதேசத்தில் பரவும் மர்ம நோய்; 300-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஆந்திரப் பிரதேசத்தில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் ஏலூரு நகரத்தில், அடையாளம் காணப்படாத ஒரு விதமான நோயால் 300-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கடந்த சனிக்கிழமை முதல், குழந்தைகள், பெண்கள் உள்பட, 345 பேர் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஞாயிறு மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி, சுமார் 200 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகாரிகள் இந்த கண்டுபிடிக்கப்படாத நோயின் காரணத்தை விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது தேசிய வேதியியல் தொழில்நுட்ப மையத்தின் குழு ஒன்றும் இன்று ஏலூரு சென்று ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதாக பிபிசி தெலுங்கு சேவையின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து, ஏழு பேரைக் கொண்ட மருத்துவக் குழு ஒன்றும் ஏலூரு வந்துள்ளது என்றும் நோய் பாதிப்பு உள்ளாகியுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவிக்கிறார்.

இந்த புதிய மர்ம நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு குமட்டல், வலிப்பு முதல் நினைவிழப்பு வரை பல அறிகுறிகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஏலூரு அரசு மருத்துவமனையில், தேவையான அளவுக்கு படுக்கைகளை அதிகரித்துக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே இந்தியா, கொரோனா வைரஸ் பெரும் தொற்றை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில், மர்ம நோயும் வந்திருக்கிறது.

இந்த அடையாளம் காணப்படாத நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்திருப்பதாக, உள்ளூர் ஊடகம் குறிப்பிடுகிறது.

இந்த அடையாளம் காணப்படாத நோயால் பாதிக்கப்படுபவர்கள், குறிப்பாக குழந்தைகள், கண்கள் எரிவாதாகக் கூறுகிறார்கள்.

அதன் பின் திடீரென வாந்தி எடுக்கத் தொடங்குகிறார்கள். இன்னும் சிலர் மயங்கி விழுந்துவிடுகிறார்கள் அல்லது வலிப்பு வந்துவிடுகிறது என ஏலூரு அரசு மருத்துவமனையில் இருக்கும் மருத்துவ அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் கூறியிருக்கிறார்.

இந்த அடையாளம் காணப்படாத நோயால் பாதிக்கப்பட்ட பலரும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு, உடல் நலம் தேறி விரைவாக மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்புகிறார்கள்.

இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் ரத்த மாதிரிகளில், எந்த விதமான வைரஸ் தொற்றும் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சுகாதார அமைச்சர் ஆல்ல கலி கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் கூறியிருக்கிறார்.

ஆல்ல கலி கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும் பதவி வகிக்கிறார். இவர்தான் நோய் பரவல் ஏற்பட்டுள்ள ஏலூரு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ளார்.

இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த இடங்களை, அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்ட பிறகு, மக்கள் இந்த மர்ம நோயால் பாதிக்கப்படுவதற்கு நீர் மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு காரணமல்ல எனக் கூறி இருக்கிறார்கள். இது ஏதோ மர்ம நோய், பரிசோதனைக் கூடங்களின் பகுப்பாய்வுகள் தான் இது என்ன என்று வெளிப்படுத்தும் என்றார் அமைச்சர் ஸ்ரீநிவாஸ்.

ஆந்திரப் பிரதேசத்தின் எதிர்க் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, இந்த நோய் குறித்து விசாரணை வேண்டும், இந்த நோய்க்கு மாசுபாடுதான் காரணம் எனவும் வலியுறுத்தி இருக்கிறது.

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இன்று ஏலூரு நகர அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை செல்லவுள்ளார்.

Related Posts