Ad Widget

அரவிந்த்சாமியின் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்’

ஜெயம் ரவி – அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான `தனி ஒருவன்’ படம் அரவிந்த்சாமிக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அரவிந்த்சாமி தற்போது `சதுரங்கவேட்டை 2′, `வணங்காமுடி’, `பாஸ்கர் ஒரு ரஸ்கல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் `நரகாசூரன்’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதில், சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு மம்மூட்டி – நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் `பாஸ்கர் தி ரஸ்கல்’. இந்தப் படம் தற்போது `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதையும் இயக்குநர் சித்திக்கே இயக்குகிறார்.

இவர் தமிழில் ஏற்கனவே விஜய், சூர்யா இணைந்து நடித்த `ப்ரண்ட்ஸ்’, விஜயகாந்த், பிரபுதேவா நடித்த `எங்கள் அண்ணா’ மற்றும் விஜய், அசின் நடித்த `காவலன்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர். `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ இயக்குநர் சித்திக் தமிழில் இயக்கும் நான்காவது படம். இந்தப் படத்தை ஹர்சினி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஹர்சினி தயாரிக்கிறார்.

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் அர்விந்த் சாமி ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் `தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகாவும் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதுகிறார். பா.விஜய், விவேகா பாடல்கள் எழுத, அம்ரேஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் துவங்கி சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related Posts