Ad Widget

அரசை எச்சரிக்கும் வடக்கு மீனவர்கள்!

கடலை நம்பி வாழ்க்கை நடத்தும் வட மாகாண தமிழ், முஸ்லிம் மீனவர்களின் பிரச்சினைக்கு அரசு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் தாம் எப்போதும் அமைதியாக காத்திருக்கப் போவதில்லை என்றும் மன்னார் மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் மொஹமட் ஆலம் வலியுறுத்தியுள்ளார்.

alam-fish

மன்னார் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவிற்கும், மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இடையிலான விசேட சந்திப்கு இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பிலுள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘மன்னார், முள்ளிக்குளம், காயாக்குழி ஆகிய பிரதேசங்களில் அண்மைக் காலமாக தென்னிலங்கை மீனவர்களின் பிரசன்னம் அதிகரித்துள்ளதால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்கள் குறித்த பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுதை காட்டிலும் தங்களை அங்கு பதிவுசெய்து குடியேறும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருவதாக உள்ளூர் மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே பாரிய முரண்பாடான நிலை தோற்றம் பெற்றதுடன், அண்மையில் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக முறைப்பாடு செய்யும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. ஆனால் தென்னிலங்கை மீனவர்களின் பிரசன்னம் இடம்பெறாத நிலையில், இன்றைய சந்திப்பில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இதன்படி எதிர்வரும் புதன்கிழமை தென்னிலங்கை மீனவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இது தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு தீர்வு எட்டப்படும்.

ஆனால் எமது அமைதியை கண்டு நாம் அரசு கூறும் அனைத்தையும் அவ்வாறே ஏற்றுக்கொள்வோம் என்று நம்பிவிடாதீர்கள்’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts