Ad Widget

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

batti

மட்டக்களப்பு – மண்முனை- தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மண்முனைத் தெற்கு உட்பட கெவிலியாமடுப் பகுதியில் கால்டைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களுக்குள் அத்துமீறி நுழைந்து, விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள குடும்பங்களுக்கு நிரந்தரமாக அந்தக் காணிகளை பகிர்ந்தளிக்க மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உட்பட பௌத்த பிக்குகள் சிலர் மேற்கொண்ட முயற்சிகளை, கெவிலியா மடு கிராமசேவகர் உட்பட அரச அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த சுமனரத்ன தேரர், கெவிலியாமடு கிராவ சேவகரை, தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததுடன், தமிழர்கள் அனைவரும் புலிகள் என்று அடையாளப்படுத்தி, கொலை அச்சுறுத்தலும் விடுத்தார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு முன்னிலையிலேயே மங்களாராம தலைமை பிக்கு, இந்த அச்சுறுத்தலை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே குறித்த பிக்குவிற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் ஏந்தியவாறும், டயர்களை எரித்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் ஜனதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் கையளிப்பதற்கான மகஜர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனால் கையளிக்கப்பட்டுள்ளது.

Related Posts