Ad Widget

அம்பன் பகுதி தொடர்பில் விசேட கவனம் செலுத்துகிறோம் – டக்ளஸ்

வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதி உள்ளிட்ட ஏனைய பகுதிகளினது அபிவிருத்தி தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தி வருகின்றோம்’ என பாரம்பறிய மற்றும் சிறுகைதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Maheswarey-found-dak

‘குறிப்பாக, அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களது வாழ்வாதாரம், சுயதொழில் வாய்ப்பு உள்ளிட்ட விடயங்களில்  எதிர்காலத்தில் துறைசார்ந்தோர் ஊடாக திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன’ என்றும் அவர் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (1) இடம்பெற்ற மகேஸ்வரி நிதியத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘மக்களை குழப்பும் வகையில் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். குறிப்பாக எமது கட்சியினதும் மகேஸ்வரி நிதியத்தினதும் பெயரை தமது சுயலாப அரசியலுக்காக தவறான வழியில் பயன்படுத்தி ஆதாயம் தேட முயல்கின்றனர்.

இதுவிடயத்தில் மக்கள் தெளிவாகவும் விழிப்புடனும் உண்மைகளை கண்டறிய வேண்டும். நாம் மக்கள் விரோத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அல்ல. எதிர்காலத்திலும் அதற்கு இடங்கொடுக்கப் போவதுமில்லை.

எமது பக்கம் தவறு இருக்குமேயானால் மக்கள் சுட்டிக்காட்ட வேண்டுமென்பதே எமது விருப்பமாகும். இப்பகுதியின் இயற்கை வளங்களுக்கோ மக்களின் நலன்களுக்கோ புறம்பாக நாம் எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. எதிர்காலத்திலும் குறித்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவோம்.

இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் மரநடுகை திட்டத்தை மகேஸ்வரி நிதியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுப்பதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்த பங்களிப்பை வழங்கி இந்நடவடிக்கையினை வெற்றியடையச் செய்ய வேண்டும்’ என மக்களிடம் கோரினார்.

இதன்போது,  அம்பன் பகுதி மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட அமைச்சர்,  சுயதொழில் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கு  மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

இதன்போது வடமராட்சி கிழக்கு உழவியந்திர உரிமையாளர் சங்கத்தை அமைப்பது, மணல் ஏற்றும் தொழிலாளர்கள் சங்கத்தை அமைப்பது மற்றும் மின்சாரம் போக்குவரத்து, வீதிப்புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

மகேஸ்வரி நிதியத்தின் இணைப்பாளர் ரஜீவ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வடமராட்சி கிழக்கு (பருத்தித்துறை) பிரதேச செயலர் திருலிங்கநாதன், அமைச்சரின் ஆலோசகர் சுந்தரம் டிவகலால உள்ளிட்ட அம்பன் பகுதி மக்களின் பிரதிநிதிகளும் உரையாற்றினர்.

Related Posts