Ad Widget

அமைச்சரவை அனுமதி கிடைத்தால் வடக்கு தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம்

அமைச்சரவையின் அனுமதி கிடைத்தால் வடமாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுவோர் நிரந்தரமாக சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இராசா ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடமாகாணத்திற்கு மூவாயிரத்து 200 ஆசியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடமாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் குறித்து வினவியபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

வடக்கில் 15 ஆயிரத்து 200 ஆசிரியர்கள் கடமையில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த யூன் மாதத்திலிருந்து ஆசிரிய ஆளணி அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தற்போது இந்த தொகை 18 ஆயிரத்து 860 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை அடுத்த வருடம் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அமைச்சர் வாரியத்தில் அனுமதி பெற்று அதனை மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான பரீட்சை நடத்தப்பட்டுள்ளதுடன், இந்த மாத இறுதியில் குறித்த பெறுபேறு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் 1000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை வடமாகாணத்தில் ஆயிரத்து 335 பேர் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுவதாகவும், இவர்களையும் அமைச்சரவைப் பத்திர அனுமதி கிடைத்தால் நிரந்தரமாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலாளர் இதன்போது உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts