அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழான கைதுகள், வட- கிழக்கில் தொடரும் காணி அபகரிப்புக்கள் என்பன இனவாதப்போக்கை அடிப்படையாகக்கொண்டிருப்பதாகவும், இவை இன ரீதியிலான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகவும் இன ரீதியிலான சமத்துவம் மற்றும் நீதி தொடர்பான அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் விசேட பிரதிநிதி டிஸிரி எம் கொமியெர் ஸ்மித்திடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எடுத்துரைத்துள்ளார்.
இன ரீதியிலான சமத்துவம் மற்றும் நீதி தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் விசேட பிரதிநிதி டிஸிரி எம் கொமியெர் ஸ்மித் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளார்.
அவர் இலங்கையின் பல்லின சமூகங்கள் முகங்கொடுத்திருக்கும் சவால்களைக் கேட்டறிதல் மற்றும் அச்சவால்களை முறியடிப்பதற்கான கூட்டிணைந்த வாய்ப்புக்களை அடையாளங்காணல் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு மலையகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செய்திருப்பதுடன், பொதுமக்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.
அதன்படி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனை வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்த டிஸிரி எம்.கொமியெர் ஸ்மித், மலையகப்பகுதிகளுக்கு தான் நேரடியாக விஜயம் மேற்கொண்டதாகவும், எனவே வட, கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைவரம் குறித்துத் தெளிவுபடுத்துமாறும் சுமந்திரனிடம் கேட்டுக்கொண்டார்.
அதற்குப் பதிலளித்த சுமந்திரன், குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் இனவாதப்போக்கிலான செயற்பாடுகளும், பெரும்பான்மையின சமூகம் பேரினவாதப்போக்கில் பயணிக்க முற்படுவதுமே இன ரீதியிலான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று அண்மையில் போரில் உயிரிழந்த அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்தமைக்காகப் பலர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டமை மற்றும் வட, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கள் என்பன பற்றியும், அவை இனவாத அடிப்படையிலேயே இடம்பெறுகின்றன எனவும் அவர் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்தார்.
அவற்றை செவிமடுத்த கொமியெர் ஸ்மித், இதனை உரியவாறு கையாள்வதற்கு அமெரிக்க அரசாங்கம் எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த சுமந்திரன், அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் தொடர்பில் அமெரிக்கா உடனடியாகக் கண்டனம் வெளியிட்டமை, 2012 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரத்தை நகர்த்துவதில் முன்னின்று செயற்பட்டுவருகின்றமை போன்றவற்றை உதாரணமாகக் கூறியதுடன், எனவே இவ்விடயத்தில் அமெரிக்கா இயலுமானதைச் செய்துவருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் தமிழ், முஸ்லிம், மலையக அரசியல்வாதிகளுக்கு இடையில் நிலவும் ஒற்றுமை குறித்து அமெரிக்கப் பிரதிநிதி கேள்வி எழுப்பியபோது, ஒவ்வொரு தரப்பினரதும் அடையாளங்கள் வேறுபட்டவையாக இருப்பினும், தமிழர் விவகாரம் என்று வரும்போது அனைவரும் ஒருமித்து செயற்படுவதாக சுமந்திரன் தெரிவித்தார்.