‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் மற்றும் ‘NEEK’ பட புகழ் ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
முன்னதாக, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத்தும், படத்தின் டைட்டில் டீசரை நடிகர் விஜய் சேதுபதியும் வெளியிட்டு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தனர். டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.
தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், ‘அன்பே டயானா’ திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான புதிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.