Ad Widget

அதிபர்கள் இடமாற்றம் இரத்து

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிபர்களின் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அண்மையில் வடமாகாண கல்வி அமைச்சினால் சில பாடசாலைகளின் அதிபர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இது பல்வேறு மட்டங்களில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சில பாடசாலைகளின் அதிபர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக பல்வேறு மட்டங்களின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

அந்த வகையில் இந்த விடயம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல்கள் ஆணையாளரினால் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டதுடன், அதில், அதிபர்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தார்.

ஜூலை மாதம் 10ஆம் திகதியிடப்பட்டு PE/2015/19/JAF03 இலக்கமுடைய கடிதம் மூலம் தேர்தல் தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட அதிபர்களின் இடமாற்றம், தேர்தல் சட்டவிதிகளுக்கு முறணானது எனவும் எனவே, இக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிபர்கள் இடமாற்றம் தொடர்பில் தனக்கு விளக்களிக்குமாறும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை, தேர்தல்கள் ஆணையாளர் கோரியுள்ளார்.

அதுவரையில் இந்த அதிபர்கள் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறும், தேர்தல்கள் ஆணையாளர் அந்த கடிதத்தின் மூலம் உத்தரவிட்டுள்ளார். ஆணையாளரின் கடித்தின் பிரதி வடமாகாண பிரதம செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts