நல்லூரில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு இம்முறை இடம் இல்லை!!

நல்லூரில் மாவீரர் கல்வெட்டு வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படும் இடத்தினை இம்முறை மணிவண்ணன் மான் கட்சியினருக்கு வழங்ககூடாது என்று சைக்கிள் கட்சி உறுப்பினர்கள் யாழ். மாநகர சபையில் நேற்று (11) போர்கொடி தூக்கியிருந்தனர்.

இருப்பினும் தமிழரசுக் கட்சி மற்றும் சங்குக் கூட்டணியின் உறுப்பினர்கள் அந்த இடத்தில் வழமையாக மாவீரர்களின் கல்வெட்டுக்களை காட்சிப்படுத்தும் நிகழ்வினை செய்யும் மான் கட்சியினருக்கு வழங்குவதே முறை என்று வாதிட்டனர்.

இவ்வாறு சபையில் நேற்று ஏற்பட்டிருந்த கடும் வாக்குவாதத்தை அடுத்து, குறித்த இடத்தினை யாருக்கும் வழங்குவது இல்லை என்று யாழ்.மாநகர முதல்வரால் தீர்மானிக்கப்பட்டது.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நல்லூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள சபைக்குச் சொந்தமான காணியை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக யாருக்கு வழங்குவது என்ற விடயம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது
குறிப்பாக அந்த காணியில் வருடாவருடம் மாவீரர் கல்வெட்டுக்களை வைத்து
அஞ்சலி நிகழ்வுகளை நடத்தி வருகின்ற யாழ்.மாநகர முன்னாள் முதர்வல் வி.மணிவண்ணனின் சங்கு கட்சியினர் இம்முறையும் அந்த காணியை தமக்கு தருமாறு யாழ்.மாநகர சபையிடம் கோரியிருந்தனர்.
இருப்பினும் அந்தக் காணியை தமக்கு தருமாறு கோரி சைக்கிள் கட்சியினரும் மாநகர சபையிடம் கோரியுள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே அந்தக் காணியை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் நேற்று சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்த போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினல் (ஈ.பி.டி.பி) வெளிநடப்புச் செய்திருந்தனர்.

இருந்த போதும் அந்த காணியை வழமையாக அஞ்சலி நிகழ்வுகள் செய்யும் மணிவண்ணன் தரப்பினருக்கு வழங்குவதே முறையாகும் என்று யாழ்.மாநகர முதல்வர் தெரிவித்திருந்தார்.

இதனை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர். மேலும் சங்கு கூட்டணி உறுப்பினர்களும் முதல்வரின் கருத்தினை ஏற்றிருந்தனர்.

இருப்பினும் சபையில் பொங்கி எழுந்த சைக்கிள் கட்சி உறுப்பினர்கள் அந்த இடத்தினை தமக்கே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

இதனால் சபையில் வழமையாக நிகழ்வுகளை செய்யும் மணிவண்ணன் தரப்பினருக்கு அந்த இடம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர்களுக்கும், சைக்கிள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

குறிப்பாக நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவது என்பது சைக்கிள் கட்சிக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட ஒன்றா, அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் நினைவேந்தலை நடத்துவதற்கு உரித்துடையவர்கள் என்ற கருத்தினை முன்வைத்தனர்.

இருப்பினும் தமக்கே அந்த இடம் தரப்பட வேண்டும் என்பதில் சைக்கிள் கட்சி உறுப்பினர்கள் இறுதிவரை பிடிவாதமாக நின்றனர். இந்நிலையில் அந்த வாதப்பிரதிவாதங்களை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அனைத்து தரப்பினர்களும் ஒன்றிணைந்து வந்தால் அந்த நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுவதற்கான இடம் சபையால் வழங்கப்படும். இல்லையேல் இருவருக்கும் வழங்கப்படமாட்டாது என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

Related Posts