Ad Widget

அடியாள்களுடன் வந்த அமைச்சர் டக்ளஸாலேயே குழப்பம் ஏற்பட்டது! முதலமைச்சர் அலுவலகம் தெரிவிப்பு

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் குழப்பமடைந்தமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அவர் அழைத்துவந்த சம்பந்தமில்லாத வெளியாள்களுமே காரணம். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

cv-vickneswaran-cm

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம், அடிதடி சண்டையாகியதில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் நால்வர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று வடக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு முதலமைச்சர் தெரிவித்தவை வருமாறு:-

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மிகத் துரதிர்ஷ்டவசமாக திடீரென முடிவுக்கு வந்தது. இதற்கான முழுப்பொறுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் அவர் வெளியிலிருந்து கூட்டத்திற்குக் கொண்டு வந்த வெளியாள்களையுமே சாரும்.

தேர்தல் ஆணையாளரினால் அரசியல் சம்பந்தமாகவோ அரசியல் கட்சிகள் பற்றியோ வேட்பாளர்கள் பற்றியோ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் உரை எதுவும் நிகழ்த்தக்கூடாது என்று இன்றைய கூட்டத்தில் அரச அதிபர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில் இணைத்தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது உரையில் அரசியல் ரீதியாகப் பேசி வடக்கு மாகாண சபையையும் அதன் ஆளுங்கட்சி உறுப்பினர்களையும் வடக்கு மாகாண சபையின் தேர்தல் விஞ்ஞானபனத்தையும் கடுமையாக விமர்சித்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சர்வாதிகாரமாக அடக்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் முயன்றார்.இதனால் அங்கு குழப்பம் ஆரம்பமாகியது.

இதன்போது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தகுதியில்லாத மர்ம நபர்கள் சிலரும் குறுக்கிட்டுக் கொண்டனர். இதனால் குழப்பம் மேலும் அதிகரித்தது. அமைச்சர் டக்ளஸ் சார்பில் கலந்துகொண்டவர்கள் கையில் கிடைத்த பொருள்களால் வன்முறைத் தாக்குதல் நடத்தினர்.

இதனால் கூட்டத்தில் பதற்றம் தோன்றியது. மக்கள் பிரதிநிதிகளும் கூட்டத்தை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்றைய ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு சம்பந்தமில்லாது அழைத்துவரப்பட்ட வெளியாட்களும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தயாரித்து எடுத்துவந்திருந்த நான்கு பக்க அரசியல் அறிக்கை வாசிக்கப்பட்டமையும், இது முற்கூட்டியே நன்கு திட்டமிட்டு குழப்பத்தை உண்டாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது.

மிகவும் வெட்கப்படவேண்டிய இந்த வன்முறைத் தாக்குதலில் வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், விந்தன் கனகரத்தினம், சி.சிவயோகன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். மேலும் சில உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலின்போது பாதுகாப்புப் பிரிவினர் ஈ.பி.டி.பி.உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எவரும் பாதுகாப்பு வழங்கவில்லை என்பதும் கவலைக்குரியதே என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறது அரசு – சிவாஜி காட்டம்

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் டக்ளசின் ஆள்கள் தாக்கியதில் விவசாய அமைச்சருக்கு காயம்

தங்கள் உறுப்பினர்களில் ஐவருக்கு காயம் – ஈ.பி.டி.பி

Related Posts