Ad Widget

அடப்பன்குளம் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

வீட்டுத்திட்டத்தில் தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வவுனியா அடப்பன்குளம் கிராம மக்கள் முன்னெடுத்துவந்த உண்ணாவிரத போராட்டம், நேற்று (வியாழக்கிழமை) இரவுடன் கைவிடப்பட்டுள்ளது.

செட்டிகுளம் பிரதேச செயலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் தொடர்புகொண்டு தாம் வீடுகளை பெற்றுத்தருவதாக வழங்;கிய வாக்குறுதியினை அடுத்தே ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடப்பன்குளம் கிராம மக்கள், அடப்பன்குளம் அம்மன் கோவில் வாளகத்தில் நேற்று (வியாழக்கிழமை) காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தமது கிராமத்திற்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் திடீரென வேறு கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தே இவ்ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 1984ஆம் ஆண்டு யுத்த அனர்த்தத்தால் இடம்பெயர்ந்து இந்தியா மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து தற்போது மீள்குடியேறி 7 வருடங்களாகிய போதிலும் வீட்டுத்திட்டத்தில் தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அம்மக்கள் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts