Ad Widget

அச்சுவேலி, திக்கம் முகாம்களை மூட முடியாது – வணிகசூரிய

army-ruwan-vanikasooreyaதமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பு மீண்டும் உயிர் பெறுவதை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு அச்சுவேலி இராணுவ முகாம் மிகவும் முக்கியமென கருதப்படுவதனால் எக்காரணம் கொண்டும் அந்த முகாம் அகற்றப்பட மாட்டாதென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:-

குறித்த முகாம் 1995 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது இந்த முகாமில் 09 குடும்பங்களுக்குரிய காணிகள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவர்களுக்குரிய நஷ்ட ஈட்டுத்தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரச சேவைகளுக்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் சட்டம் 1950 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் பிரகாரமே வடக்கில் இராணுவ முகாம்களுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன.

இவ்வாறான காணி சுவீகரிப்பு இல்லையென்றால் நாட்டில் இன்றைய அதிவேகப் பாதைகள் இருக்காது. அபிவிருத்தி பணிகள் நடைபெற்றிருக்க முடியாது.

மேலும் நுணாவிலிலுள்ள இராணுவ முகாமை இன்னும் 02 மாதங்களில் மூட நாம் தீர்மானித்துள்ளோம். அங்கிருந்த இராணுவத்தினருக்காக ஏனைய முகாம்களில் கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டிடப்பணிகள் முடிந்த பின்னர் இம் முகாம் மூடப்படும்.

திக்கத்திலுள்ள இராணுவ முகாம் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியதாகும். அதனையும் இராணுவம் தம் வசம் தொடர்ந்தும் வைத்திருக்கும். அப்பிரதேசத்தில் காணி உரிமை கோருவோருக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கும் என்றும் பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Posts