வெளிநாட்டவர் வடக்கிற்கு செல்ல பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வேண்டும்

வெளிநாட்டவர் வட மாகாணத்துக்கு செல்லவேண்டுமாயின் அதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

ruwan-vanika-sooreyaa

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் யாழ். விஜயத்தையொட்டி வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டிருப்பவர்கள் இலங்கையின் வடபகுதிக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் எந்தவித உண்மைகளும் இல்லை.

இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற நீண்ட கால யுத்தம் நிறைவுக்கு வந்தையடுத்து தற்போது வடக்கு பகுதியில் சுமூகமான நிலை ஏற்பட்டு வருகின்றது. வடக்கில் மட்டுமல்ல நாட்டின் பல பிரதேசங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் மீண்டும் பிரச்சினையை தோற்றுவிபதற்கு இடங்கொடுப்பதற்கான எந்தவொரு அவசியமும் எமக்கு இல்லை. அதற்கு நாம் இடம்தர மாட்டோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் அல்லது பிரச்சினையை தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக சொல்லப்படுவது முற்றிலும் தவறான கருத்து. உண்மையில் வடபகுதிக்கு செல்ல வெளிநாட்டவர்களுக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை.

எனினும், வடபகுதிக்கு வெளிநாட்டவர்கள் செல்லும் போது அது தொடர்பில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிடம் அறிவித்து விட்டு செல்லும் நடைமுறை காணப்படுகின்றது. இது சாதாரண நடைமுறையாகும். சகல நாடுகளிலும் இது காணப்படுகின்றது. இலங்கையில் இது நடைமுறையில் இருந்தது. தற்போது இருக்கின்றது. தொடர்ந்து இருக்கும்.

வெளிநாட்டு பிரஜையொருவர் வடபகுதியில் தான் செல்லும் இடம், என்ன காரணங்களுக்காக செல்கின்றார்? எங்கு தங்க போகிறார்? என்ற விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் அறிவித்து, அனுமதி பெற்று செல்ல வேண்டும்.

அது மாத்திரமன்றி வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அவர்கள் செல்லும் இடம் நோக்கம் என்பவை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு அறியதருமாறு கோரப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.