Ad Widget

‘விஸ்வரூபம்’ திரைப்படத்துக்கு மீண்டும் நீதிமன்றம் தடை

visparoopamஉலக நாயகன் கமல்ஹாஸன் தயாரித்து நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ திரைப்படத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று தடை விதித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் திரையிடலாம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் நேற்று இரவு 10.20க்கு தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதனையடுத்து தமிழக அரசினால் இன்று காலை மேற்படி திரைப்படத்துக்கு தடை கோரி மேல் முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உரிய விசாரணைகளை அடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததுடன் திரைப்படத்தை திரையிடவும் தடை விதித்தது.

இத்திரைப்படத்துக்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து கமல் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்றிரவு 10.20 மணிக்கு திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று இரவு 11 மணிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எலிபி தர்மராவின் வீட்டுக்குச் சென்ற அரசு வழக்கறிஞர்கள், திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நாளை (இன்று) காலை இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து இன்று காலை மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. இதை ஏற்று அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான குழு காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இதனை பதிவு செய்தது. பின்னர் வழக்கு பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிபதி எலிபி தர்மராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு, இந்த வழக்கை விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், படத்துக்கு தடையை நீக்கி தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணையை 6ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related Posts