வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முல்லைத்தீவு பொலிஸார் சனிக்கிழமை (13) விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற மாவீரர் தினத்தன்று, விளக்கேற்றி மாவீரர்களை நினைவுகூர்ந்தமை தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஒன்றரை மணிநேரமாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது, யாருடைய பின்புலத்தின் அடிப்படையில் விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது? மற்றும் விளக்கேற்றும் போது ஊடகவியலாளர்களும் இருந்தார்களா? என்பது தொடர்பில் பொலிஸாரால் கேள்விகள் எழுப்பப்பட்டதாக ரவிகரன் கூறினார்.
பொலிஸாரின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள ரவிகரன், ‘தான் வருடாவருடம் விளக்கேற்றுவதாகவும், தனது உறவுகளில் பலர் மாவீரர்கள் ஆகியுள்ளதாகவும் அவர்களை நினைத்து விளக்கேற்றுவதாகவும் கூறியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ரவிகரனை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்துவது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர் கடந்த மே 5ஆம் திகதியும் விளக்கேற்றியமைக்காக விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.