2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை முடிவுகள் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் திகதியை தற்போதைக்கு அறிவிக்க முடியாது என்று கூறினார்.
எவ்வாறாயினும், ஜூன் மாத நடுப்பகுதியில் சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், இதற்காக 4,51,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 3,82,249 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் எனவும், 69,214 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.