யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை

வடக்கு – கிழக்கு மக்கள் எந்த வித இடையூறுமின்றி தமது உறவுகளுக்காக நினைவஞ்சலிகளை மேற்கொண்டனர். அதற்காக அந்த மக்கள் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கின்றனர். அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என யாழ். மாவட்ட தேசிய மக்கள் சக்தி எம்.பி ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற மத்திய வங்கி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த 18ஆம் திகதி வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் மிகவும் உணர்ச்சி பூர்வமாக முள்ளிவாய்க்கால் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் நான், எனது குடும்பம் எனது சகோதரர்கள் வாழ்ந்த அந்த நிலையை இன்று நினைத்துப் பார்க்கின்றேன். அன்றைய மனித அவலங்களை இன்றும் மறக்க முடியாமல் உள்ளது.

பலர் உயிரிழந்தும் மேலும் பலர் காணாமற் போயும் உள்ள நிலையில் இன்று வரை அவர்களுக்கான முடிவு அல்லது நீதி கிடைக்கவில்லை. கடந்த 18ஆம் திகதியும் அனைவரும் ஒன்றிணைந்து கண்ணீர் மல்க தமது அஞ்சலிகளை மேற்கொண்டிருந்தார்கள்.

தெற்கில் நேற்றைய தினம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெளிவாக ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் இனி ஒருபோதும் யுத்தம் இடம்பெறாது. அதற்கு ஒரு போதும் இடமளிக்கவும் போவதில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்தம் காரணமாக மக்கள் பெரும் அவலங்களை சந்தித்துள்ளார்கள். அதிலிருந்து மீண்டு இந்த நாட்டை அடுத்த தலைமுறைக்கு சிறந்ததாக கையளிக்க வேண்டுமானால் அரசாங்கத்தையும் மக்களையும் சரியான விதத்தில் வழிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

யுத்தகாலத்தில் தற்போது அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அங்கு வசிக்கவில்லை.எனினும் நான் அங்கு தான் வசித்தேன். அதனால் யுத்தத்தினால் ஏற்பட்ட வலியையும் வேதனையையும் இந்த நாட்டின் ஒரு குடிமகனாக நான் உணர்ந்துள்ளேன்.

அதனால் தான் இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் உட்பட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அரசாங்கம் உண்மையான நிலையைக் கண்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதனை தெளிவுபடுத்த தயாராக உள்ளது.

கடந்த பதினெட்டாம் திகதி வடக்கு கிழக்கு தாயக பகுதிகளில் மக்கள் எந்த வித இடையூறுமின்றி, அச்சுறுத்தலுமின்றி தமது உறவுகளுக்காக நினைவஞ்சலிகளை மேற்கொண்டனர். அரசாங்கம் அதற்கு எந்தவித தடைகளையும் விதிக்கவில்லை. அதற்கு அந்த மக்கள் அரசாங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டுள்ளனர் என்றார்.

Related Posts