Ad Widget

விருதைத் திரும்பத் தரப்போவதில்லை- கமல்ஹாசன்

இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்துவருவதாகக் கூறப்படுவதற்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திரும்ப அரசுக்கே அனுப்பிவரும் நிலையில், தேசிய விருது பெற்ற நடிகர் கமல்ஹாசன் தனக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திரும்பித் தரப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

kamal-haasanjpg

தேசிய விருதுகளை திரும்ப அளிப்பவர்களுக்கும் கூட பொறுமையுடன் கூடிய சகிப்புத்தன்மை தேவை என்றார் அவர்.

இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணர்ச்சி அதிகமாகியுள்ளதாகவும், சகிப்புத்தன்மை குறைந்துள்ளதாகவும் குறை கூறி விஞ்ஞானிகள், திரைப்பட துறையினர் மற்றும் எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய விருதை திரும்ப அளித்துள்ளனர்.

இந்நிலையில் வழங்கப்பட்ட விருதுகளை திரும்ப அளிப்பது என்பது, காட்டப்பட்ட அன்புக்கு அவமானம் தேடி கொடுப்பது போன்ற செயல் என்று கமல் ஹாசன் விமர்சித்துள்ளார்.

அதே சமயம் சகிப்புத்தன்மையின்மை என்பது தற்போது புதியதாக உருவானது கிடையாது என்றும், சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டிலிருந்தே அது இருந்த காரணத்தால் தான் இந்திய பாகிஸ்தான் என இரண்டு நாடுகள் உருவாகியதாகவும் அவர் கூறினார்.

ஒருவேளை அந்த சமயத்தில் இந்த சகிப்புத்தன்மை இருந்திருந்தால், இந்த இருநாடுகளும் ஒரே நாடாக திகழ்ந்து வல்லரசாக உருமாறியிருக்க கூடும் என்றும் கமல் ஹாசன் கருத்து வெளியிட்டார்.

ஆகையால் தற்போது எதிர்ப்புகளை பதிவு செய்ய பல்வேறு வழிவகைகள் உள்ளன என்றும், தற்போது வரை விருதுகளை திரும்ப அளித்தவர்கள் கூட அவர்களது எதிர்ப்புகளை வெளிக்காட்ட வேறு முறைகளை பின்பற்ற கூடிய திறன் படைத்தவர்கள் தான் என்றும் கமல் அப்போது குறிப்பிட்டார்.

“விருதை திரும்ப அளிப்பதை விட, எதிர்ப்பை வெளிப்படுத்தி எழுதப்படும் அவர்களது ஒரு கட்டுரையே கூட அதிகமான கவனத்தை ஈர்த்துவிடும். அதனால் அவர்கள் தங்கள் விருதுகளை அவர்களிடமே வைத்துக்கொண்டு பெருமை சேர்க்க வேண்டும். தொடர்ந்தும் கூட அவர்கள் சகிப்புத்தன்மையின்மையை வெளிப்படுத்தும் எந்த ஒரு அரசாங்கத்துக்கு எதிராகவும் போராட வேண்டும்”, என்றார் கமல் ஹாசன்.

தான் பெற்ற விருதை திரும்ப அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், அவ்வாறு விருதை திரும்ப அளிப்பவர்களுக்கும் தான் ஒரு போதும் ஆதரவு அளிக்க மாட்டேன் என்றும் கமல் ஹாசன் கூறினார். மேலும் இதன் மூலம் நான் எந்த ஒரு அரசுக்கும் அல்லது அரசாங்கத்துக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், தற்போது நிலவும் சகிப்புத்தன்மையின்மை என்கிற சூழல் கூட முந்தைய வராலற்றில் உள்ளது போல காலத்தால் மாறிவிடும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

Related Posts