வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு தகுதியான செயலரை நியமிக்க வேண்டும்.முதலமைச்சரிடம் கோரிக்கை

வலி. தென்மேற்கு பிரதேச சபையின் செயலாளரின் நடவடிக்கையின் நம்பிக்கை இழந்த பதில் தவிசாளர், சபையை வினைத்திறனான முறையில் நடத்துவதற்கு வசதியாக அனுபவமுள்ள செயலாளர் ஒருவரை நியமிக்குமாறு வடமாகாண முதலமைச்சரிடம் கோரியுள்ளார்.

வலி . தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் தமது பதவியை இராஜினாமா செய்து கொண்டமையைத் தொடர்ந்து உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய உபதவிசாளர் எஸ்.சிவகுமார் பதில் தவிசாளராகக் கடமையாற்றி வருகின்றார்.

இப் பிரதேச சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுடன் செயலாளர் முரண்படுவதனாலும் சபையினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காமையினாலும் சபையை வழிநடத்த முடியாமலிருப்பதனால் அனுபவமுள்ள செயலாளரை நியமிக்குமாறு பதில் தவிசாளர் உள்ளூராட்சி உதவி ஆணையாளரைக் கோரியிருந்தார்.

பதில் தவிசாளரின் கோரிக்கையை நடை முறைப்படுத்த உள்ளூராட்சி உதவி ஆணையாளர் முன்வராமையினால் வடமாகாண முதலமைச்சரின் உதவியை நாடியுள்ள பதில் தவிசாளர், பிரதேச சபையின் வளர்ச்சி கருதியும் மக்களின் நலன்கருதியும் அனுபவமுள்ள செயலாளரை நியமிக்குமாறு முதலமைச்சரைக் கோரியுள்ளார்.