வட பகுதி மக்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளை வழங்கத் தயாராக இருக்கின்றோம் என யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் உதவித் தூதுவர் சுரேஸ் மேனன் தெரிவித்தார்.
அளவெட்டி அருனோதயாக் கல்லூரியில் நடைபெற்ற மாற்று வலுவுள்ளோரின் நாடக ஆற்றுகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் எங்களை விட திறமையானவர்களாக இருக்கின்றார்கள்.அவர்களிற்கு சிறந்த வழிகாட்டல்களுடன் அன்பும் அரவணைப்பும், இருக்குமேயானால் அவர்களால் பல சாதனைகளை நிலைநாட்ட முடியும். இதற்கு பெற்றோர் ஆசிரியர்களின் வழிகாட்டல் முக்கியமானதாக அமைகின்றது’ என்றார்.
‘இவ்வாறான மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கு கலை முக்கிய பங்கை வழங்குகின்றது. குறிப்பாக சங்கீதம், சித்திரம், நடனம் போன்றன மாற்றுத் திறனாளிகளை ஆற்றல்படுத்த உதவுகின்றது’ என்று அவர் மேலும் குறிப்பட்டார்.
அத்துடன், மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு எல்லோரும் பங்காற்ற வேண்டும். வட பகுதியில் இந்திய பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த விடயத்திற்கும் எம்மால் இயன்ற உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.