வடமாகாண சபையால் நிவாரண பொருட்கள் சேகரிப்பு

பதுளை, கொஸ்லாந்த மீரியாபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பொருட்டு வடமாகாண சபையால் பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கைதடியிலுள்ள வடமாகாண சபை கட்டடத்தொகுதியில் வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற விசேட கூட்டத்தொடரின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

north

இக்கூட்டத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், அமைச்சர்கள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இவ்வுதவி திட்டம் தொடர்பாக முதலமைச்சர் கருத்துக் கூறுகையில்,

பொருட்களை வழங்க விரும்பும் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனின் அலுவலகத்திலும் வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுகாதார அமைச்சின் உப அலுவலகம், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்திலும், மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மீன்பிடி, போக்குவரத்து மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரனின் அலுவலகத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கள்ளப்பாடு பொது நோக்கு மண்டபத்தில் உறுப்பினர் துரைராசா ரவிகரனிடமும், கிளிநொச்சி மாவட்டதை சேர்ந்தவர்கள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் எதிர்கட்சி உறுப்பினர் சி.தவநாதன் ஆகியோரிடம் (55 ஆம் கட்டை பொறியியலாளர் அலுவலகம் வீதி அபிவிருத்தி திணைக்களம்) ஒப்படைக்க முடியும்.

அத்துடன், இந்த நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு வடமாகாண சபை உறுப்பினர்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கவுள்ளனர்.

பொருட்களை வழங்க விரும்புவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (03) முன்னர் தங்கள் பொருட்களை வழங்க முடியும்.

இதன்போது சேகரிக்கப்படும் பொருட்கள் மூன்று விதமாக பொதிகளில் பொதியிடப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அதாவது, வயது வந்தவர்களுக்கான பொதி, குழந்தைகளுக்கான பொதி, பொதுவான பொதி என பொதியிடப்படவுள்ளன.

ஆகவே, பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் பொதியிடலுக்கு தேவையான பொருட்களை மாத்திரம் வழங்கும்படி கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் மேலும் கூறினார்.