வடக்கு மீளக் குடியமர்த்தும் செயலணியை நிராகரிக்க வடக்கு மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை!

வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துவதற்கு அக்கறை காட்டாத வடக்கு மாகாணசபை, சிங்கள, முஸ்லிம் மக்களை வடக்கு மாகாணத்தில் மீளக் குடியமர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட செயலணியை நிராகரிப்பதற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லையென யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனைத் தலைவரும், வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளருமான பி.ஏ.சுபியான் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை பதவிக்கு வந்தபின்னர், எத்தனையோ தடவைகள் முஸ்லிம்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் வி.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்திருந்தோம். எனினும், அதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில்தான், வடக்கு மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த புதிய செயலணி உருவாக்கப்பட்டது.

அந்தச் செயலணியை முடக்குவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கொள்ளும் முயற்சியானது வேடிக்கையானதே. வடக்கில் டி.எம் சுவாமிநாதனால் வழங்கப்பட்டுள்ள 65,000 வீட்டுத் திட்டத்திற்கு எதுவுமே கதைக்காத வடக்கு மாகாண முதலமைச்சர், செயலணிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது எந்தவகையில் நியாயம் எனவும் கேள்வியெழுப்பினார்.

Related Posts